
கட்சி அலுவலகத்தில் பெண் ஒருவருடன் பா.ஜ.க தலைவர் ஆபாசமாக இருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்ட பா.ஜ.க தலைவராக அமர் கிஷோர் காஷ்யப் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கட்சி அலுவலகத்திற்குள் அமர் கிஷோரும், பெண் ஒருவரும் கட்டிப்பிடித்து ஆபாசமாக நடந்து கொண்டனர். இந்த சம்பவம், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இது தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கூறியதாவது பா.ஜ.க மாவட்டத் தலைவர் அமர் கிஷோர் காஷ்யப் , “அந்த வீடியோவில் இருக்கும் பெண், கட்சி நிர்வாகி. அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, ஓய்வெடுக்க இடம் கேட்டார். நான் அந்த பெண்ணை, அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன். படிக்கட்டுகளில் ஏறும் போது அந்த பெண்ணுக்கு மயக்கம் வந்தது, அதனால் அவரைத் தாங்கிப் பிடித்தேன். என்னை அவமதிக்க அந்த காட்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று கூறினார்.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி அமர் கிஷோருக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் கோவிந்த் நாராயண் அனுப்பிய அந்த நோட்டீஸில், ‘சமூக ஊடகங்களில் பரவிய அந்த காணொளி, கட்சியின் நற்பெயருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், ஒழுக்கமின்மை பிரிவின் கீழ் வரும் நடத்தையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மாநிலத் தலைவரின் அறிவுறுத்தல்களின்படி, ஏழு நாட்களுக்குள் பாஜக மாநில அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு இதன்மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்திகரமான பதிலை வழங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.