
சமீப காலங்களில் பிரதமர் மோடியையும், கேரளா அரசையும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தொடர்ந்து பாராட்டி பேசி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தின் போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் பாராட்டிப் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று பத்திரிகை ஒன்றியில் சசி தரூர் பாராட்டி எழுதியிருந்தார். கேரளா அரசை பாராட்டி சசி தரூர் கூறிய கருத்து, மாநில காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடியையும், கேரளா அரசையும் பாராட்டிப் பேசியிருந்த சசி தரூர் கூறிய கருத்துக்கள், காங்கிரஸ் கட்சி தலைமையும் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது. இதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து சசி தரூர் ஓரங்கட்டப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையில், கட்சியில் இருந்து சசி தரூர் விலக்கப்பட உள்ளார் என்று தகவல் பரவி வந்தது. இந்த தகவலுக்கு பதிலளித்த சசி தரூர், ‘கட்சி என்னை விரும்பினால், நான் அங்கே இருப்பேன். இல்லையென்றால், எனக்கு என் சொந்த வேலைகள் உள்ளன. எனக்கு வேறு வழிகள் இல்லை என்று நீங்கள் நினைக்கக்கூடாது’ காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக எச்சரித்தார். இந்த சலசலப்புக்கு மத்தியில் சசி தரூர், பா.ஜ.க மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசி அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, சசி தரூர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைய உள்ளார் என்ற பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே புகைந்தது.
இந்த சூழ்நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரை சசி தரூர் பாராட்டி பேசியிருந்தார். பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மத்திய அரசு நடத்திய தாக்குதல் சிறப்பானவை என்றும், பாகிஸ்தானுடனான பிரச்சனையை பிரதமர் மோடி திறமையாகக் கையாண்டார் என்றும் இதற்கான முழு மதிப்பெண்களையும் அவருக்கு கொடுக்கிறேன் என்று பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜ.க அரசையும் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. கட்சியில் போதுமான ஜனநாயகமும், பேச்சு சுதந்திரமும் இருக்கிறது, ஆனால், சசி தரூர் அதனை மீறிவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். காங்கிரஸ் தலைமை இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து வருகிறது.
இந்த சலசலப்புக்கு மத்தியில், சசி தரூருக்கு மத்திய பா.ஜ.க அரசு பொறுப்பு கொடுத்துள்ளது. சமீபத்திய இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்களுக்கு விளக்கமளிப்பதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மத்திய பா.ஜ.க அரசு அமைத்துள்ளது. இதில் ஒரு குழுவை காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசி தரூருடன் சேர்ந்து, பா.ஜ.க எம்.பி ரவி சங்கர் பிரசாத், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி சேர்ந்த சஞ்சய் குமார், பா.ஜ.க எம்.பி பைஜயந்த் பாண்டா, திமுக எம்.பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மற்ற குழுவை வழிநடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘மிக முக்கியமான தருணங்களில், இந்தியா ஒற்றுமையாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற எங்கள் பகிரப்பட்ட செய்தியை எடுத்துச் சென்று ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்வார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக இது அமையும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குழுவும் 5–6 எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குச் செல்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.