
கட்சி ஒழுக்கத்தை மீறுவதாகக் கூறி இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏக்களை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏவும், கட்சியின் கொறடாவுமான எஸ்.டி.சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கனுக்கு வாக்கு அளித்தார். அதே போல், மற்றொரு கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏவான ஏ.சிவராம் ஹெப்பர், வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தார். இந்த இரண்டு செயல்களும், பா.ஜ.க கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு குரல் வந்தது.
இந்த நிலையில், கட்சி ஒழுக்கத்தை மீண்டும் மீண்டும் மீறுவதாகக் கூறி கர்நாடகா எம்.எல்.ஏக்கள் இருவரான எஸ்.டி.சோமசேகர் மற்றும் ஏ.சிவராம் ஹெப்பர் ஆகியோரை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் செயலாளர் ஓம் பதம் வெளியிட்ட கடிதத்தில், ‘கட்சி ஒழுக்கத்தை மீறுவது குறித்து ஹெப்பர் மற்றும் சோமசேகர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களது பதில்கள் திருப்திகரமாக இல்லை என்பதை குழு கண்டறிந்து உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்கள் 6 ஆண்டுகளுக்கு கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.கவின் இந்த முடிவை கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “எஸ்.டி.சோமசேகர் மற்றும் சிவராம் ஹெப்பர் ஆகியோர் விதான சவுதாவில் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. பல எஃப்.ஐ.ஆர்கள் உள்ளன, ஏராளமான விசாரணைகள் நடைபெற்றுள்ளன. சில சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எய்ட்ஸ் ஊசி போட முயன்றனர், மற்றவர்கள் எடியூரப்பாவை சிக்க வைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நவரத்தினங்களை அவர்கள் தங்கள் கட்சியில் வைத்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் கர்நாடகாவில் நடைபெற்ற எச்.டி.குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) அரசாங்கத்தை வீழ்த்தி, பா.ஜ.க ஆட்சிக்கு வர உதவிய 18 காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் எம்.எல்.ஏக்களில் எஸ்.டி.சோமசேகர் மற்றும் ஹெப்பரும் அடங்குவர். அதன்படி, 2019ஆம் ஆண்டில் பி.எஸ்.எடியூரப்பா முதலமைச்சரானார். அதன் பிறகு, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் இருவரும் பா.ஜ.கவுக்கு மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.