Skip to main content

பா.ஜ.க வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை; அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
BJP candidate banned from campaigning in west bengal

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு கட்டமாக 381 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு நேற்று (20-05-24) மாலை நடந்து முடிந்தது. இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் ஒருவருக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரம் தடை விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தொடர்ந்து, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் மேற்கு வங்காளத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் நீதிபதி போட்டியிடும் தம்லுக் தொகுதியில் ஆறாம் கட்டமாக வரும் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

அந்த வகையில், தம்லுக் தொகுதியில் பா.ஜ.க சார்பில் கடந்த 15ஆம் தேதி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து மிகவும் மோசமான விமர்சனத்தை வைத்ததாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து அபிஜித்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்தனர். அந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி கடந்த 17ஆம் தேதி அபிஜித்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

அந்த நோட்டீஸுக்கு அபிஜித் நேற்று (20-05-24) விளக்கம் அளித்திருந்தார். அதை விசாரித்த தேர்தல் ஆணையம், பொதுவெளியில் பேசும்போது மிகவும் கவனத்துடன் பேச வேண்டும் என்று அபிஜித்துக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும், அபிஜித்தின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறிய பேச்சு என்று முடிவு செய்து, இன்று (21-05-24) மாலை 5 முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அபிஜித் தேர்தல் பிரச்சார தடை விதிப்பதாகத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத் தடை விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்