Advertisment

மகாராஷ்டிரா தேர்தலில் பிட்காயின்?; சுப்ரியா சுலே மீது பா.ஜ.க பரபரப்பு குற்றச்சாட்டு

BJP accuses Supriya Sule for Bitcoin in Maharashtra Elections

Advertisment

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு நேற்று (20.11.2024) நடைபெற்றது. இந்த தேர்தலோடு, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இதற்கிடையில், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பிட்காயின் மூலம் பணம் விநியோக்கிப்படுவதாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவில் வெளியிட்ட வீடியோவில், கடந்த 2018ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத் பவாரின் மகளும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரியா சுலே மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவும் கிரிப்டோ கரன்சி ஊழலில் ஈடுபட்டதாகவும், நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு நிதியளிக்க பயன்படுத்தியதாகவும் புனே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர பாட்டீல் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக சில ஆடியோக்களை பா.ஜ.க வெளியிட்டிருந்தது. அதில், கிரிப்டோ கரன்சியை பணமாக்குவதன் மூலம் அதை மகாராஷ்டிரா தேர்தல் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தும் சதியில் சுப்ரியா சுலே மற்றும் நானா படோலே ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு குரல் பதிவுகள் இருந்தன. மேலும், இந்த கிரிப்டோ கரன்சிஊழல் தொடர்பாக தணிக்கை நிறுவன ஊழியர் கவுரவ் மேத்தா, சுப்ரியா சுலே வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த குற்றச்சாட்டை சுப்ரியா சுலே மற்றும் நானா படோலே ஆகியோர் மறுத்து இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக சுப்ரியா சுலே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “"சுதன்ஷு திரிவேதி என் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன். இவை அனைத்தும் யூகங்கள் மற்றும் பொய்யானவை, மேலும், பா.ஜ.கவின் எந்தவொரு பிரதிநிதியுடன் அவர்கள் விரும்பும் நேரத்தில் மற்றும் தேதியில், பொது மன்றத்தில் விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன். அவதூறு வழக்கும், கிரிமினல் வழக்கும் போட்டுள்ளேன். சுதன்ஷு திரிவேதியின் ஐந்து கேள்விகளுக்கு எங்கும், எந்த நேரத்திலும், எந்த மேடையிலும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் புனையப்பட்டவை” என்று கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கவுரவ் மேத்தாவுக்கு சொந்தமாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா தேர்தலுக்கு, பிட்காயின் பயன்படுத்தியதாக பா.ஜ.க வைத்த குற்றச்சாட்டி அம்மாநில அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது.

BITCOIN Maharashtra
இதையும் படியுங்கள்
Subscribe