
கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'எச்5 என்1' எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. பொதுவாக பறவைகளின் இடப்பெயர்வு காலத்தில் இந்நோய் பறவைகளை அதிகம் தாக்கும். அந்தவகையில் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தப் பறவைக் காய்ச்சல் பரவத்தொடங்கியது.
நாடு முழுவதும் இந்தப் பறவைக் காய்ச்சலால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், அம்மாநில கால்நடைத் துறையினரின் துரித நடவடிக்கையால் குட்டநாடு, ஆலப்புழா, கோட்டயம், கைப்புழம் உட்படப் பல பகுதிகளில் 40,000க்கும் அதிகமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கருதப்பட்டதால், உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு எடுத்துவர அம்மாநில முதல்வர் தடை விதித்திருந்தார். இதற்கிடையே டெல்லியில் உயிரிழந்த 8 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் தாக்கம் தற்போது முற்றிலும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us