
பீகாரில் மாணவிகள் மத்தியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்ததால் மாணவர் ஒருவர் தேர்வு அறையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மனிஷ் சங்கர் என்பவர் கடந்த 1 ஆம் தேதி தேர்வு எழுத சுந்தர்கர் பகுதியில் உள்ள பிரில்லியண்ட் கான்வெண்ட் பள்ளிக்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது, பள்ளி வளாகத்தில் சுமார் 500 மாணவிகள் வரை குழுமியிருந்துள்ளனர். அங்கு இவர் மட்டுமே மாணவர் என்பதால் இதனைக் கண்டு மனிஷ் சங்கர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தான் தேர்வு எழுதும் அறைக்குச் சென்றபோது, அங்கு 50 மாணவிகள் அமர்ந்து தேர்வு எழுத காத்திருந்தனர்.
மாணவிகள் மத்தியில் மனிஷ் மட்டுமே தனி ஒரு மாணவராகத் தேர்வு எழுத தனது இருக்கையில் அமர்ந்தார். இச்சூழலில் மனிஷ் மிகவும் பதற்றமடைந்து, உடல் நடுங்கிய நிலையில் தேர்வு அறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். தேர்வு அறையில் இருந்து மனிஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மனிஷ் தனது தேர்வுக்கூட விண்ணப்பத்தில் பாலினத்தை தேர்வு செய்வதில் ஆண் என்பதற்குப் பதிலாக பெண் என மாற்றி பதிவு செய்து விட்டதால், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு கூடத்தில் இவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.