Bhumi Chauhan narrowly escapes boarding Air India flight due to 10-minute delay

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று(12.6.2025) மதியம் 1.39 மணிக்கு பேயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை(விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார்.

இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அவரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விமானம் வெடித்துச் சிதறி விழுந்ததில் அந்த பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு டாடா குழுமத்தின் சார்பாக தலா ரூ.1.கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த விமான விபத்து சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 10 நிமிடம் தாமதமாக சென்றதால், விமானத்தில் பயணிக்க வேண்டிய பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த பூமி சவுகான் லண்டனில் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்மையில் தனது பெற்றோரை பார்க்க இந்தியா வந்திருந்த அவர் நேற்று வெடித்துச் சிதறிய ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் செல்வதற்கு டிக்கெட் புக் செய்திருந்தார். ஆனால் விமானத்தில் பயணம் செய்வதற்காக நேற்று வீட்டில் இருந்து கிளம்பிய பூமி சவுகான் அகமதாபாத் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார். அதன்பின் விமான நிலையத்திற்கு10 நிமிடம் தாமதமாக வந்த பூமி சவுகான் தான் எப்படியாவது அந்த விமானத்தில் பயணித்து லண்டன் சென்றே ஆகவேண்டும் என்று அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதனால் விமானம் நிலையத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

இது குறித்து பேசிய பூமி சவுகான், “கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார். 10 நிமிடம் தாமதமாக சென்றேன் அதிகாரிகளிடம் என்னை அனுமதிக்குமாறு கெஞ்சினேன். தற்போது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த விமான விபத்தி பார்க்கும் போது, அது நானாக இருந்திருக்கலாம்... நானாக இருந்திருக்கக் கூடும். எனது தந்தை என்னை கட்டிப்பிடித்து அழுதார். நான் ஏன் காப்பாற்றப்பட்டேன் என்று தெரியவில்லை. ஆனால், என்னைக் காப்பாற்றியவர்களை மறைக்க மாட்டேன்.”என்று உருக்கமாக பேசினார்.