ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழந்தவரின் உடலைச் சாலையிலேயே போட்டுச் சென்ற ஊழியர்கள்...

12:15 PM Jul 07, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சாலையிலேயே போட்டுச்சென்ற அவலம் போபாலில் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் போபால் பகுதியில் வசித்து வந்த வாஜித் கான் என்பவர் சிறுநீரகப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்குக் கரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால், கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் உயிரிழந்ததை அறிந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சாலையோரத்தில் அவரது உடலைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

அவரின் உடல் சாலையோரத்தில் இருப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்களின் உத்தரவுப்படி, மீண்டும் அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த உடலை எடுத்துச் சென்றனர். அதுவரை, சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அந்த உடல் சாலையிலேயே கிடந்துள்ளது. மேலும், அவரை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது அவர் உயிருடன் இருந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார். கரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதில் இதுமாதிரியான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என அரசாங்கங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT