டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் 5ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

Advertisment

deepika padukone

இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் ஒன்று திரண்டு டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.

தீபிகா படுகோன் தயாரித்து நடித்துள்ள படம் ‘சபாக்’. இந்த படம் வருகிற 10ஆம் தேதி நாளை ரிலீஸாக இருக்கிறது. இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி என்பவரின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தீபிகா படுகோன் ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த நிலையில் சபாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மிக்காக பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர் அபர்னா பட் சபாக் படத்திற்கு தடை கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அந்த மனுவில் லக்‌ஷ்மியின் கதையை வைத்து படத்தை எடுத்துவிட்டு, அவருக்கான கிரெடிட் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.