ADVERTISEMENT

''பாரத் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்''-ராகுல் காந்தி கருத்து 

04:33 PM Sep 10, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்ற பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்றைய ஜி20 மாநாட்டில் ஒவ்வொரு தலைவர்கள் இருக்கைக்கு முன்பும், அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடும் வகையில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பு ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பல நாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்பொழுது வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசுகையில் ''இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஏற்றுக் கொள்ளக் கூடியவை. இந்தியா, பாரத் என்ற இரண்டு சொல்லையும் அரசியல் சட்டம் பயன்படுத்துகிறது. எனவே இந்த சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பாரத் என்று அழைப்பதால் எங்களுக்கு பிரச்சனை இல்லை.

கீதை, பல உபநிடதங்கள் உள்ளிட்ட பல்வேறு இந்து தத்துவ நூல்களை தான் படித்துள்ளேன். பாரதிய ஜனதா பேசும் கொள்கை இந்துயிசமோ, இந்து தத்துவமோ இல்லை. பாரதிய ஜனதா கட்சி கூறும் இந்துத்துவம் எந்த இந்து தத்துவ புத்தகத்திலும் இல்லை, உபநிடதங்களிலும் இல்லை. மற்ற மதத்தினரை அச்சுறுத்துமாறும் துன்புறுத்துமாறும் எந்த இந்து தத்துவ நூல்களும் கூறவில்லை. இந்து தேசியவாதம் என்பதே தவறான வார்த்தை. பாஜகவுக்கும் இந்து தத்துவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாஜகவை ஆதரிப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை. எந்த வழியிலாவது அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கையளவு நபர்கள் ஆதிக்கம் பெற வேண்டும், ஒரு சிலரிடம் நாட்டின் செல்வம் குவிய வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. இந்தியாவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். 40% பேர் தான் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்'' என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT