ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்கிவரும் ஸ்விக்கி நிறுவனம் புதிதாக 'ஸ்விக்கி கோ' என்ற பெயரில் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் பொருட்களை நகரின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பலாம். இந்த சேவை இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டு வருகிறது.

Advertisment

bengaluru woman lost 95000 rupess to fake swiggy go customer care

அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி இந்த சேவை பெங்களூரு நகரில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட அந்த தினமே இந்த சேவையை பயன்படுத்திய ஒரு பெண்ணிடமிருந்து ஒரு கும்பல் 95,000 ரூபாயை மோசடி செய்துள்ளது.

பெங்களூரு நகரை சேர்ந்த அபர்ணா தாக்கர் சூரி(47) என்ற பெண் தனது கைப்பேசியை விற்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஓஎல்எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிலால் என்பவர் அபர்ணாவை தொடர்பு கொண்டு கைப்பேசியை வாங்க ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவரிடம் கைப்பேசியை கொண்டு சேர்க்க அபர்ணா ‘ஸ்விக்கி கோ’ சேவையில் பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் சரியான முகவரியை கொடுக்காததால் அந்தக் கைப்பேசி பிலாலிடம் சென்று சேரவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து அபர்ணா ஸ்விக்கி கோ டெலிவரி நபரிடம் தொடர்பு கொண்ட போது அந்தக் கைப்பேசி ஸ்விக்கி அலுவலகத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அபர்ணா ‘ஸ்விக்கி கோ’ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ள நினைத்துள்ளார். எனவே கூகுள் மூலமாக கிடைத்த ஒரு எண்ணிற்கு அவர் தொடர்புகொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், மீண்டும் மற்றொரு ஆர்டர் செய்தால் அவரது கைப்பேசி உரிய இடத்தில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே அபர்ணா தனது கைப்பேசிக்கு வந்த ஒரு லிங்க் மூலம் மீண்டும் அந்த ஆர்டரை செய்துள்ளார். அப்போது அபர்ணாவின் வங்கி கணக்கு விவரம் மற்றும் யுபிஐ ஐடி உள்ளிட்டவை கேட்கப்பட்டுள்ளது. இதனைக் கொடுத்த சிறிது நேரத்தில் அபர்ணாவின் வங்கி கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அபர்ணா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்விக்கி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “அபர்ணா ஸ்விக்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைக்கவில்லை. அவர் வேறு ஒரு எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அளித்துள்ளார். எனவே இந்த அளவிற்கு பணத்தை இழந்துள்ளார். மேலும் ஸ்விக்கி நிறுவனம் எப்போதும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரத்தை கேட்காது என்பதை மீண்டும் நான் தெளிவு படுத்த விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.