ADVERTISEMENT

பெங்களூருவில் பயங்கரம்; முதல்வர் சித்தராமையா விளக்கம்

07:26 PM Mar 01, 2024 | prabukumar@nak…

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் உணவகத்தில் பணியாற்றி வந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர். அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க வைக்கும் குழுவினர் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் ஓட்டலுக்கு வந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து உணவகத்தில் பணிபுரியும் காவலாளி கூறுகையில், “நான் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். பல வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். திடீரென பலத்த சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டது, இதனால் ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது" என்றார். இந்நிலையில் மர்மப் பொருள் வெடித்தது குறித்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்பு என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளிவர விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு முழு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். விசாரணை நடந்து வருகிறது. தடய அறிவியல் குழுவிடமிருந்து உரிய தகவல் பெறப்படும்” எனத் தெரிவித்தார். மேலும் ஓட்டலில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT