பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bengaluru hotel karnataka NIA
இதையும் படியுங்கள்
Subscribe