Advertisment

காளையை சாய்த்த கரடி; பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பலத்த அடி!

The bear leaning over the bull; Strike for stock market investors!

இந்திய பங்குச்சந்தையில் டிச. 13 - 17 வாரப்பகுதி, முதலீட்டாளர்களை தொடர்ந்து கொதி நிலையிலேயே வைத்துவிட்டு முடிந்திருக்கிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (டிச. 17) சென்செக்ஸ் தடாலடியாக 889.40 (1.54%) புள்ளிகளும், நிப்டி 263.20 (1.53%) புள்ளிகளும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளன. பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பொருத்தவரை இது ஒரு கருப்பு வெள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

Advertisment

ஒமிக்ரான் வைரஸ் பரவல் மீதான அச்சம், மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு, அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisment

குறிப்பாக, அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.

தேசிய பங்குச்சந்தையான நிப்டி வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது.

கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது 3.5 சதவீதம் வரை உயர்ந்த நிப்டி, நடப்பு வாரம் அதே வேகத்தில் 17000 புள்ளிகளாக (3 சதவீதம்) சரிந்தது.வாரத்தின் கடைசி வர்த்தக தினமான டிச. 17ம் தேதி, தேசிய பங்குச்சந்தை நிப்டி 263.20 புள்ளிகள் சரிந்து 16985.20 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 889.40 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 57011.74 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

''பெடரல் வங்கி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு, பணப்புழக்கத்தை மேலும் இறுக்குவதும், வரும் ஆண்டில் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழலாம் என்ற தகவலும்தான் சந்தைகளில் ஏற்பட்ட சரிருக்கு முககிய காரணங்கள்,'' என்கிறார் ஜோசப் தாமஸ். இவர், எம்கே வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவன ஆராய்ச்சிப் பிரிரின் தலைவர்.

மேலும் அவர் கூறுகையில், ''ஒமிக்ரான் வைரஸ் தொற்று பிரச்னை உருவானதில் இருந்தே சந்தையில் சரிவும், அவ்வப்போது ஏற்ற இறக்கங்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா முதல் அலையின்போதும் இதே போன்ற எதிர்மறை தாக்கம் இருந்தது. எனினும், மத்திய பட்ஜெட்டில் நல்ல அம்சங்கள் இடம்பெறக்கூடும் என்ற தகவல்கள் வரும் வரை சந்தையில் இப்போதுள்ள நிலையற்றத் தன்மை தொடரும்,'' என்றும் கூறுகிறார் ஜோசப் தாமஸ்.

டிச. 10ம் தேதி அன்று 267.68 லட்சம் கோடியாக இருந்த மும்பை பங்குச்சந்தை மூலதனம் டிசம்பர் 17ம் தேதியன்று, 259.4 லட்சம் கோடியாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் சொத்து டிச. 13 & 17 வாரத்தில் 8.30 லட்சம் கோடி சரிந்துள்ளது. நடப்பு வாரத்தில் ஐந்து வர்த்தக நாள்களிலுமே காளையை தொடர்ந்து கரடி பதம் பார்த்தது என்றே குறிப்பிடலாம்.

கடந்த இரண்டு மாதங்களில், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 15.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிஎஸ்இ சந்தை மூலதனம் அதிகபட்சமாக டிச. 18ம் தேதியன்று 274.69 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு காலாண்டு முடிவுகள் வரத்தொடங்கும் காலம் வரை, அதாவது டிசம்பர் இறுதி வரை சந்தைகளில் ஏற்ற, இறக்கம் இருக்கும் என்பதோடு, எதிர்மறையான சார்பு நிலைகள் தொடரும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

''உலகளவில் மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கையை கடுமையாக்குவதால் சந்தைகள் சரிவைக் கண்டன. வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மைகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

மேலும், சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் விரிவடையத் தொடங்கியிருப்பதும் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை விளைவிக்கும்,'' என்கிறார் மோதிலால் ஆஸ்வால் நிதிச்சேவை நிறுவன சில்லரை விற்பனை ஆராய்ச்சிப்பிரிவுத் தலைவர் சித்தார்த்தா கெம்கா.

''கரோனா மூன்றாவது அலை, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள், எதிர்கால தேவை போக்கு, உள்ளீட்டு செலவு மற்றும் பணவீக்கத்தின் விகிதம் ஆகியவை பங்குச்சந்தைகளின் போக்கை தீர்மானிக்கலாம். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை, வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் ஆகியவற்றின் போக்குகளும் சந்தை நிலவரத்தை நகர்த்தும் முக்கிய காரணிகளாக இருக்கும்,'' என்கிறார் கோட்டக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்கு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஷிபானி குரியன்.

Mumbai nifty sensex
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe