ADVERTISEMENT

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்.ஐ.ஏ. 

04:41 PM Mar 06, 2024 | prabukumar@nak…

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. இது குறித்து தேசியப் புலனாய்வு முகமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியின் கைதுக்கு வழிவகுக்கும் எந்த ஒரு தகவலுக்கும் ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். தகவல் அளிப்பவர்கள் 080-29510900, 8904241100 என்ற தொலைப்பேசி எண்களுக்கும், info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் எஸ்.பி., தேசியப் புலனாய்வு முகமை, 3வது தளம், பி.எஸ்.என்.எல். டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், 80 அடி சாலை, எச்.ஏ.எல். 2வது நிலை, இந்திரா நகர், பெங்களூரு, கர்நாடகா - 08 என்ற அஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT