Skip to main content

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு! 

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

p chidambaram

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று (10.11.2021) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பாபர் மசூதியை யாரும் இடிக்கவில்லை என கூறுவதற்கு நாம் யாரும் வெட்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

 

'சன்ரைஸ் ஓவர் அயோத்தியா - நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்' என்ற சல்மான் குர்ஷித்தின் புத்தக வெளியீட்டு விழாவில் ப. சிதம்பரம் பேசியதாவது, “அந்தக் கதை (அயோத்தி பிரச்சனை) 1992இல் தொடங்கி சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் எதிர்பாராத முடிவுக்கு வந்தது.

 

இந்த தீர்ப்பிற்கான நீதித்துறை முகாந்திரங்கள் மிகவும் குறுகியது. ஆனால் நீண்டகாலம் கடந்ததால் அனைத்து தரப்பும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டன. இரு தரப்பும் அதை ஏற்றுக்கொண்டதால், அது சரியான தீர்ப்பாக மாறிவிட்டது. இது இருதரப்பும் ஏற்றுக்கொண்ட சரியான தீர்ப்பல்ல. உண்மை என்னவென்றால், டிசம்பர் 6, 1992 அன்று நடந்தது மோசமான தவறு. அது நமது அரசியலமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்திய சம்பவம். அது உச்ச நீதிமன்றத்தையும் மீறி, இரு சமூகங்களுக்கு இடையே இணைக்க முடியாதது போல தோன்றும் இடைவெளியை உருவாக்கியது. அது தவறு; மோசமான தவறு. அது எப்போதுமே மோசமான தவறுதான் என 1000 முறை சொல்லுவேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், பாபர் மசூதியை யாரும் இடிக்கவில்லை என்று சொல்ல நாம் வெட்கப்படவில்லை. அந்த முடிவு நம்மை எப்போதும் ஆட்டிப்படைக்கும்.” இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் இந்த விழாவில் பேசிய திக்விஜய் சிங், "அத்வானியின் ரத யாத்திரை சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவில்லை, பிளவுபடுத்தியது. அவர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் வெறுப்பின் விதையை தூவி, நாட்டில் மதவெறிக்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினார். வீர் சாவர்க்கர், பசு மாதா என அழைக்கப்படுவதைக் கேள்வியெழுப்பினார். மாட்டுக்கறி சாப்பிட்டார். இந்து என்ற அடையாளத்தை நிலை நிலைநாட்ட இந்துத்துவா என்ற வார்த்தையைக் கொண்டுவந்தார். அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது" என கூறியுள்ளார்.

 

மேலும் அவர், 1858ஆம் ஆண்டு முதல் ராம ஜென்மபூமி சர்ச்சை இருந்துவந்தது. விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை அதை ஒரு பிரச்சனையாக மாற்றவில்லை. ஆனால், 1984ஆம் ஆண்டில் இரண்டு சீட்டுகளுக்கு சுருக்கப்பட்ட பின்னர் அவர்கள் இதனை தேசிய பிரச்சனையாக்க முடிவு செய்தனர். ஏனென்றால் அடல் பிஹாரி வாஜ்பாயின் காந்திய சோசலிசம் தோல்வியடைந்தது. அதனையடுத்து அவர்கள் தீவிர மத அடிப்படைவாதத்தை எடுத்துக்கொண்டனர்" எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் செய்யப்போவது என்ன? - ப.சிதம்பரம் பேட்டி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
'Rahul's five guarantees'-P. Chidambaram interview

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. நேற்று விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு காங்கிரஸுடன் தொகுதிப்பங்கீடு கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ப.சிதம்பரம், ''காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஐந்து வாக்குறுதிகளை தந்திருக்கிறார். ஐந்து கேரண்டி தந்திருக்கிறார். இந்த ஐந்து வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில்  இடம்பெற இருக்கிறது. அந்த ஐந்து வாக்குறுதிகள் குறித்து நான் இங்கே பேசப் போகிறேன்.

முதல் கேரண்டி இன்று வேலையில்லாமை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களை எல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மொத்த வேலையில்லாமை எட்டு சதவீதம். பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லாமை 42 சதவிகிதம். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். அதையெல்லாம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த வேலையில்லாமையை போக்குவதற்கு முதல் வழி, மத்திய அரசில் இருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவது, மத்திய அரசினுடைய நிறுவனங்கள், மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கல்வி நிலையங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசினுடைய பொதுத்துறை, மத்திய அரசின் மருத்துவமனைகள் இவைகள் எல்லாம் சேர்த்து பார்த்தால் 30 லட்சம் காலி இடங்கள் இருக்கிறது.

இந்த 30 லட்சம் இடங்களையும் பூர்த்தி செய்யலாம். முதல் கேரண்டி காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அரசு அமைந்தால் 30 லட்சம் காலி இடங்களையும் பூர்த்தி செய்வோம். இரண்டாவது கேரண்டி அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவது என்பது வழக்கமாகிவிட்டது. உத்திரபிரதேசத்தில் மட்டும் கடந்த 10,  15 நாட்களில் இரண்டு கேள்வித்தாள்கள் கசிந்திருக்கிறது. இதற்காக தேர்வை ரத்து செய்தார்கள். எத்தனை செலவு, எவ்வளவு அலைச்சல், எவ்வளவு துன்பம், எவ்வளவு மனச்சோர்வு அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கும். இதையெல்லாம் தடுக்க முடியும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் தேர்வுத்தாள் கசிவை தடுப்போம்.

மூன்றாவது கேரண்டியாக ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு சமுதாய பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும்' என தொடர்ந்து பேசி வருகிறார்.

Next Story

பிரதமர் மோடியின் அறிவிப்பு; ப. சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
PM Modi's announcement; P. Chidambaram questions

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் பற்றிய பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி ராஜஸ்தானில் பாரத் ஜோடா யாத்திரையின் போது இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி வழங்கினார். அதில், ‘காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 30 லட்சம் மத்திய அரசின் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் அமையும். கிக் (ஆன்லைன் டெலிவரி) தொழிலாளர்களுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றும். இது ராஜஸ்தான் கிக் தொழிலாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 10 கோடிகள் என மொத்தம் 5000 கோடிகள் தொழில் தொடங்க நிதி வழங்கப்படும். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த பிறகு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன் 1 வருடக் கட்டாய பயிற்சி அளிக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், ராகுல் காந்தி அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்வுகளின் போது வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில் சட்டம் வலுவாக்கப்படும். ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும். புத்தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். புத்தொழில் நிறுவனங்களுக்கான மூலதன நிதியாக ரூ. 10 ஆயிரம் கோடி உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி அறிவித்த 5 வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைப்போம். வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை. 42 சதவீத பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஆனால் பொய்யான புள்ளி விவரங்களை அளித்து மத்திய அரசு ஏமாற்றுகிறது. தேர்தல் நெருங்குவதால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த விலையை மேலும் குறைப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாது என பிரதமர் மோடி மக்களுக்கு வாக்குறுதி தர முடியுமா. பிரதமர் மோடி யாரையெல்லாம் கடுமையாக விமர்சிக்கிறாரோ அவர்களுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கிறது. தேர்தல் பத்திரங்கள் ஒவ்வொன்றையும் யார் வாங்கினார்கள் என்பதும், யார் பணம் கொடுத்தார்கள் என்பதும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

PM Modi's announcement; P. Chidambaram questions

முன்னதாக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து இன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.