ADVERTISEMENT

ராமர் அசைவமா? - ஆவேசமான அயோத்தி பூசாரி 

03:37 PM Jan 04, 2024 | ArunPrakash

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில்,தேசியவாத காங்கிரஸ் கட்சியை (சரத் பவார் அணி) சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜிதேந்திர அவாத் ராமர் குறித்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜிதேந்திர அவாத், மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “கடவுள் ராமர் பலருக்கும் பொதுவானவர். பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படுபவர். அவர் நம்மை போலவே உணவுப் பழக்கம் கொண்டவர். ராமர் சைவ உணவுகளை உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வாழ்ந்தவர் எங்கே சென்று சைவ உணவைத் தேடியிருப்பார்?. நமக்கு ராமரை முன் மாதிரியாக காண்பித்து அனைவரையும் சைவம் உண்பவர்களாக மாற்ற முயற்சி செய்கின்றனர்” என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஜிதேந்திர அவாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஜிதேந்திர அவாத் கூறுவது முற்றிலும் தவறானது. ராமர் அசைவ உணவு சாப்பிடவில்லை; அப்படி அவர் சாப்பிட்டதாக எந்த சாஸ்திரங்களிலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக ராமர் வனவாசத்தில் பழங்களை மட்டுமே சாப்பிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் கடவுள் ராமர் எப்போதும் சைவ உணவு சாப்பிடுபவர். ராமரை அவமதிக்கும் வகையில் ஜிதேந்திர அவாத் பேசுகிறார்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT