ADVERTISEMENT

வங்கிக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு; ரெப்போ விகிதம் உயர்வதால் உங்கள் வங்கிக்கடன் வட்டி உயரும் அபாயம்

09:00 PM Dec 07, 2022 | angeshwar

- தெ.சு. கவுதமன்

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரெப்போ விகிதத்தை 5வது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வங்கிக்கடன் வட்டி மேலும் உயர்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று (டிச.7 2022) நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ விகிதம்) 0.35% ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த 2022-23ஆம் ஆண்டில் மட்டுமே வெறும் எட்டே மாதங்களில் இதுவரை 5 முறை ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மே மாதம் நான்காம் தேதி முதன்முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ விகிதத்தை அப்போதைய நிதி நிலவரத்துக்கேற்ப ரிசர்வ் வங்கி மாற்றியமைக்கும். சில முறை ரெப்போ விகிதத்தை உயர்த்துவதும், சில முறை குறைப்பதும் நடக்கும். ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களாகிய பொதுமக்களுக்கு வழங்கும் வங்கிக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றத்தைச் செய்யும். ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும்போது, வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும். எனவே இது பொதுமக்களுக்குப் பாதகமாக அமையும்.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரலில் தொடங்கி இப்போதுவரை ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் 5.9% ஆக இருந்த ரெப்போ விகிதம் தற்போது, 6.25% ஆக உயர்ந்துள்ளது. இது எந்த ஆண்டுமில்லாத கடுமையான உயர்வாகும். இதன் காரணமாக வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தில், கடந்த ஏப்ரலிலிருந்து இப்போதுவரை 23% உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கிக் கடனுக்கான வட்டி உயர்த்தப்படுவதால், வங்கிக் கடனுக்கான கால அளவு மேலும் சில மாதங்கள் அதிகரிக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகை மேலும் அதிகரிக்கும்.

உதாரணமாக, ஒருவர் 20 ஆண்டு காலத்துக்கு 30 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் வாங்கியிருந்து, அவரது வட்டி விகிதம் 7% என்று ஏப்ரலில் இருந்திருந்தால் அது 9.25 சதவீதமாக உயர்வு கண்டுவிடும். அதேபோல் அவர் கட்டவேண்டிய மாதாந்திர இ.எம்.ஐ. தொகையும் சுமார் 4,000 ரூபாய் வரை அதிகரித்துவிடும். இது 17.75% உயர்வாகும். இப்படி உயர்த்தப்படுவது பொதுத்துறை வங்கியில் வங்கிக்கடன் பெற்றவர்களைவிட இதர நிதி நிறுவனங்களிலும் தனியார் வங்கிகளிலும் பெற்றவர்களுக்கு மேலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இருந்த போதும் பொருளாதார மந்த நிலையைச் சமாளிக்க ரெப்போ விகிதத்தை உயர்த்துவதைத் தவிர்க்க முடியாது என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT