ADVERTISEMENT

மணிப்பூர் கலவரம்; நள்ளிரவில் முதல்வர் வீட்டை தாக்க முயற்சி

11:02 AM Sep 29, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும் அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருந்தது.

அந்த வகையில், கான்போபி மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 3 பேர், சுராந்தபூர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ஒரு துணைக் காவல் ஆய்வாளர் என தொடர்ந்து பலியாகி வருகிறார்கள். அதனை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் புகைப்படம் சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை உருவாக்கியது. இதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மணிப்பூர் மாநிலத்தைப் பதற்றம் நிறைந்த பகுதியாக அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கா அறிவித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நேற்று (28-09-23) இரவு இம்பாலில் உள்ள முதல்வர் பைரன் சிங் பூர்வீக வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். வீட்டை தாக்கும் நோக்கில் வந்த அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முதல்வர் பைரன் சிங், இம்பாலில் உள்ள அரசு வீட்டில் இருப்பதால், இந்த முயற்சி எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பைரன் சிங்கின் பூர்வீக வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT