ADVERTISEMENT

தமிழக மாணவர் மீது ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல்; முதல்வர் கண்டனம்

02:56 PM Feb 20, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று (19.02.2023) சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவான அறையில் இந்நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் ஆவணப்படம் திரையிட இருந்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அறையை விட்டு வெளியேறாததால் ஆவணப்படத்தை திரையிட வந்த மாணவர்கள் அவர்களை அறையில் இருந்து வெளியேறக் கூறியுள்ளனர். இதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் அந்த அறையில் இருந்த தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு உண்டானது. மேலும், பெரியார் படத்தை ஏ.பி.வி.பி.யினர் சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமல்ல. கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட. டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் உள்ளிட்ட மாணவர்களை கோழைத்தனமாகத் தாக்கி பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏ.பி.வி.பி. அமைப்பினரின் செயல் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது உரிமைக்காகவும், ஒன்றிய பா.ஜ.க.வுக்கு எதிராகவும் போராடும் மாணவர்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை டெல்லி காவல்துறையும், ஜே.என்.யு. பல்கலைக்கழகக் காவலர்களும் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT