Skip to main content

தமிழக மாணவர் மீது ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல்; முதல்வர் கண்டனம்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Attack on Tamil Nadu student at Mumbai IIT; Condemned by the Chief Minister

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று (19.02.2023) சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவான அறையில் இந்நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் ஆவணப்படம் திரையிட இருந்துள்ளனர். 

 

நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அறையை விட்டு வெளியேறாததால் ஆவணப்படத்தை திரையிட வந்த மாணவர்கள் அவர்களை அறையில் இருந்து வெளியேறக் கூறியுள்ளனர். இதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் அந்த அறையில் இருந்த தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு உண்டானது. மேலும், பெரியார் படத்தை ஏ.பி.வி.பி.யினர் சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது.

 

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமல்ல. கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட. டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் உள்ளிட்ட மாணவர்களை கோழைத்தனமாகத் தாக்கி பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏ.பி.வி.பி. அமைப்பினரின் செயல் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது உரிமைக்காகவும், ஒன்றிய பா.ஜ.க.வுக்கு எதிராகவும் போராடும் மாணவர்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை டெல்லி காவல்துறையும், ஜே.என்.யு. பல்கலைக்கழகக் காவலர்களும் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்கூட்டியே துண்டு போடும் நிர்வாகிகள்; மேடையிலேயே கலாய்த்த அமைச்சர் உதயநிதி!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Minister Udhayanidhi spoke to administrators about   Deputy Chief Minister

திமுக இளைஞரணி 45வது ஆண்டு விழா இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி தலைமையில் தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். அரசியல் களத்தில் எப்படி மக்களைச் சந்தித்துப் பேசுகிறோமோ அதேபோன்று இன்றைய காலத்தில் சமூக வலைத்தளமும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பொய்யையே பேசி, பொய்யையே பரப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருங்கள்.

காலையில் எழுந்தவுடன் முரசொலியைத் தவறாமல் படித்துவிடுங்கள். முதல்வரின் அறிக்கைகள், அரசின் திட்டங்கள் என்னுடைய அறிக்கைகள், என அனைத்தையும் படித்துவிடுங்கள். முரசொலியில் தினமும் ஒரு பக்கத்தை இளைஞர் அணிக்கென்று ஒதுக்கி அதில் கருத்துகளை வெளியிட்டு வருகிறோம். முதல்வர் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனையேற்று  முதற்கட்டமாக 50 தொகுதிகளிலும் நூலகத்தைத் திறந்துள்ளோம். மிதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் நூலகம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பேச்சு போட்டி நடத்தி 100 சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமையிடத்தில் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டிருந்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தற்போது தொடங்கியிருக்கிறோம். இதற்காக 30 நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அனைத்து மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பேச்சாளர்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

இந்த மேடையில் அனைவரும் பேசி நான் துணை முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்கள். பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகள் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து இது நடக்கப்போகிறதோ என்று யூகத்தில் நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கே பேசியுள்ளனர். இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் முதல்வரின் மனதிற்கு நெருக்கமான பொறுப்பு. நான் முன்பே கூறியதுபோல, எல்லா அமைச்சர்களுமே எங்களின்  முதல்வருக்குத் துணையாகத்தான் இருப்போம் என்றேன். அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம்.

எனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான். ஆகையால் எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன். நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு உழைத்ததை போன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்காக உழைப்போம். 2026 என்ன நடந்தாலும், எந்தக் கூட்டணி வந்தாலும் ஜெயிக்க போவதும் நம்முடைய கூட்டணிதான். அதைமட்டுமே இளைஞரணி தம்பிமார்கள் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

Next Story

புதிதாகத் திறக்கப்பட்ட அரசுப் பள்ளி கட்டடத்தில் விரிசல்கள்; சீரமைப்பு பணிகள் தீவிரம்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Repairing the cracks in the new classroom building is in progress

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 956 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 12 ஆய்வகங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள், திருவண்ணாமலையில் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலகத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த கல்வி வளாகம் போன்றவற்றைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைவினாயகர்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்த போது கட்டடத்தின் தரைதளம் மற்றும் சுவர்கள் உடைப்பு, விரிசல் இருப்பதைபபார்த்து பொதுப்பணித்துறை பொறியாளரிடம், இதெல்லாம் என்ன இப்படித்தான் வேலை செய்வீங்களா என்று கூறி உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றனர். அதன் பிறகு அவசர அவசரமாக உடைப்புகளைச் சரி செய்யும்விதமாக ஆங்காங்கே சிமெண்ட் பூசியும், வெடிப்புகளில் பட்டியும் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அந்த கட்டடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். முதலமைச்சர் திறந்து வைத்த போது அந்தப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதிய மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.

முதலமைச்சர் திறந்து வைத்த பிறகும் பள்ளி வகுப்பறைக் கட்டடத்தில் ஏற்பட்டிருந்த உடைப்புகளுக்குப் பஞ்சர் ஒட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.