Skip to main content

முதல்வர் கான்வாய் மீது தாக்குதல்; பாதுகாப்பு வீரர்கள் இருவர் காயம்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
 Attack on Chief Minister's Convoy; Two security officers were injured

முதல்வர் பயணித்த வாகனத்தின் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், மணிப்பூரின் ஜிரிபம் என்ற பகுதிக்குச் செல்லவிருந்த நேரத்தில் அவர் பயணித்த கான்வாய் வாகனத்தின் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் வீரர் என இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் குக்கி இன போராளிகள் மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 53-ல் பிரேன் சிங்கின் கான்வாய் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நான்கு போராளி அமைப்பினர் முதலமைச்சரின் மீது தாக்குதல் நடத்துவதற்காக முயன்றுள்ளனர். இந்த தாக்குதலில் அருகிலிருந்த பாதுகாப்பு வீரர்கள் இருவர் காயமடைந்திருக்கின்றனர். இதில் பாதுகாப்பு வீரர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக மணிப்பூர் முதல்வர் தாக்குதலில் இருந்து தப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அண்ணனை கொலை செய்த தம்பி; உடந்தையாக இருந்த தாயும் கைது

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
The brother who attack his brother; The accomplice mother was also arrested

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பீமநகர் சேர்ந்தவர் பர்வீன் பானு (வயது 48). இவருக்கு தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாஹிர் ( 29) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தமிமுன் அன்சாரி ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குடி போதைக்கு அடிமையான தமிமுன் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தினமும் தமிமுன் அன்சாரி தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று இரவு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தம்பி சையது அபுதாஹிர் வீட்டில் இருந்த  அரிவாளால் தமிமுன் அன்சாரியின் தலையில் வெட்டினார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் மின்வயரை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே தமிமுன் அன்சாரி இறந்து விட்டார். விபரீதத்தை உணர்ந்த பர்வீன் பானு அதிகாலை 4 மணி அளவில் யாரும் அறியாத வகையில் சையது அபுதாகீருடன் சேர்ந்து தமிமுன் அன்சாரியின் உடலை அவரது ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் நீரில் போட்டு விட்டு வர முடிவு செய்தார்.

அதன்படி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடலை இறக்கும் போது இருசக்கர வாகனங்கள் வரவே உடலை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பாலத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்து ஆட்டோ நம்பரை கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ உரிமையாளர் யார்?  மாநகர  சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொலையாளிகள் பர்வீன் பானு மற்றும் சையது அபுதாகிர் என உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 Rain alert for 14 districts

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மற்றும் கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.