Atishi celebrated by dancing with party members

Advertisment

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டது. இதனால் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என்று டெல்லி தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது. மூன்று கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

இந்நிலையில் டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(8.2.2025) காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே பாஜகவின் கை ஓங்கியிருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளையும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியினர் ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறாதது அக்கட்சியின் தேசியத் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட மனிஷ் சிசோடியவும் தோல்வியை தழுவியுள்ளார். இந்த சூழலில்தான் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும் டெல்லி முதல்வருமான அதிஷியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதனைக் கொண்டாடு விதமாக தொண்டர்களுடன் அதிஷி நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகின.

Advertisment

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் தோல்வியை சந்தித்த நிலையில் அதிஷி மட்டும் தொண்டர்களுடன் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்வாதி மாலிவால் எம்.பி., “ஜன் லோக்பால் திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அதன்பின் அதனை நிறைவேற்றவில்லை. அதேசமயம், புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள அரசு சி.ஏ.ஜி அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா போன்றவர்கள் தோல்வியுற்ற நிலையில் அதிஷி மட்டும் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டது வெட்கக்கேடானது என்று விமர்சனம் செய்துள்ளார்.