Assistant Collector's office set fireTensions rise again Manipur

மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் எனப் பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 10 பேர், கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisment

இந்நிலையில், மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. வன்முறையின் போது நடந்த குற்றச் செயல்களில் தொடர்பு இருப்பதாகக் கூறி மெய்தி சமூக அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் கனன் சிங்கை, கடந்த 8ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கனன் சிங்கை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, இம்பால் மேற்கு மாவட்டம் குவாகிதெல், சிங்ஜமேய் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இதனால், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். பாதுகாப்பு படையினரின் நடமாட்டத்தை தடுக்க பல சாலைகளில் மூங்கில் கம்புகளால் போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்தினர். பெண்கள் குழுக்களும் போராட்டத்தில் இணைந்து, குராய் என்ற இடத்தில் டார்ச்லைட் ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

இந்த நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டம் யாய்ரிபேக் துலிஹலில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதனால், கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது மட்டுமல்லாமல், அங்கு இருந்த அரசு கோப்பைகள் எரிந்து சாம்பலாகின. கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதலே நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் பல இடங்களில் கலவரமாக மாறி வருகிறது. இதனால், மணிப்பூரில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.