Assets related Karnataka Chief Minister Siddaramaiah frozen

கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மைசூர் லோக்ஆயுக்தா போலீசார், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையும் நடத்தி வருகிறது. இதற்கிடையே மூடா வழக்கு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு, எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்தா போலீஸ் தெரிவித்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் சட்ட விதிகளை தவறாக புரிந்துகொள்வதால் ஏதேனும் முரண்பாடுகள் எழுந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களான முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரையும் இந்த வழக்கில் இருந்து லோக் ஆயுக்தா போலீஸ் விடுவித்தது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மூடா மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் கீழ் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 92 சொத்துக்களை முடக்கியுள்ளனர்.