Assamese woman who went Delhi passed away mysteriously Uttarakhand

5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்து உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம், திமா ஹஸாவ் மாவட்டத்தில் உள்ள சோண்டிலா ஹோஜாய் கிராமத்தில் வசித்து வந்தவர் ரஸ்மிதா ஹோஜாய் (20). இவர், ரயில்வே துறை தேர்வு எழுதுவதற்காக இந்த மாத தொடக்கத்தின் போது டெல்லிக்கு சென்றிருந்தார். தலைநகர் டெல்லிக்குச் சென்ற பிறகு, கடந்த 5ஆம் தேதி முதல் ரஸ்மிதாவை அவரது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

Advertisment

இதையடுத்து ரஸ்மிதா காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், ரஸ்மிதாவை கண்டுபிடிப்பதற்காக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், ரஸ்மிதாவை கடைசியாகப் பார்த்த இரண்டு நபர்கள் அவர் காணாமல் போனது குறித்து உத்தரகாண்டில் உள்ள சிவபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

அதனை தொடர்ந்து உத்தரகாண்டின் பவுரியில் உள்ள கங்கை நதிக்கரையில் ரஸ்மிதாவை உடல் கண்டெடுக்கப்பட்டது. உத்தரகாண்ட் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண், உத்தரகாண்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.