Skip to main content

மிதக்கும் மாநிலம்!!! அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்!! அவதிப்படும் ஒன்பது லட்சம் மக்கள்...

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

assam flood affects 9 lakh people

 

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் 23 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 9.3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. அம்மாநிலத்தின் 23 மாவட்டங்களில் சுமார் 9.3 லட்சம் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் சுமார் 1.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கவுஹாத்தி, நிமதிகாட், தேஸ்பூர் சோனித்பூர், கோல்பாரா மற்றும் துப்ரி நகரங்களில் பிரம்மபுத்ரா நதியில் பாதுகாப்பு அளவை கடந்து நீர் பாய்வதால், மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் இழந்து தவித்து வருகின்றனர். வெள்ள நிலைமை குறித்து டின்சுகியாவின் குய்ஜன் பகுதி கிராம மக்கள் தெரிவிக்கையில், "பல வீடுகள் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டது. நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்களுக்கு உதவ அரசங்கத்திலிருந்து யாரும் இங்கு வரவில்லை" எனத் தெரிவிக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“கட்சியின் அணுகுமுறை சரியில்லை” - காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Congress MP resigns in assam

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதனிடையே, நாளை (16-03-24) மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க, பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. 14 மக்களவைத் தொகுதி கொண்ட அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் ஏற்கனவே உள்ளனர். இதில், 2 எம்.பிக்களுக்கு வரவிருக்கும் 2024 ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மீண்டும் கட்சி வாய்ப்பு அளித்திருக்கிறது. 3வது எம்.பியாக உள்ள அப்துல் காலிக்கிற்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

அசாம் மாநிலத்தில், இதுவரை 2 முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை எம்.பியாக பதவி வகித்து வந்த அப்துல் காலிக், தற்போது தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று (15-03-24) அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து, தனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பியுள்ளார். 

அவர் அளித்திருந்த அந்த கடிதத்தில், ‘எனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை முழு மனதுடன் நிறைவேற்றினேன். எனக்கு ஆதரவாக நின்ற எனது தொகுதி மக்களுக்கும், கட்சியினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அளவற்ற நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மக்கள் சுதந்திரம், சுயமரியாதை மற்றும் ஒருமைப்பாட்டின் தீவிர உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு காலக்கட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரின் அணுகுமுறையும், அசாமில் கட்சியின் வாய்ப்பை அழித்துவிட்டதாக நான் உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.