"ஜஸ்டிஸ் ஃபார் ஆசிஃபா" என்ற ஹேஷ் டாக் சமூக வலைத்தளங்களில் பரவலாக பதிவிடப்பட்டு வருகிறது. அதன் பின்பு தான் ஜம்முவில் இதுபோன்ற ஒரு கோர சம்பவம் நடந்திருக்கிறது என்றும் அதை செய்தவர்களுக்கான தண்டனை கிடைக்கவில்லை என்பதும் மக்களுக்கு தெரியவருகிறது. இச்சம்பவம் தலைநகர் டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்ததை போன்ற ஒன்று, அதற்கு எப்படி இந்தியாவே கொந்தளித்ததோ அதே போன்று ஆசிஃபா வழக்கிலும் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஜனவரியில் நடந்தேறிய இந்த சம்பவத்தின் கருவே தற்போதுதான் இந்தியா முழுவதும் தெரியவந்திருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/title 1_6.jpg)
ஜனவரி 10 தேதி, பகர்வால் என்னும் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியான ஆசிஃபா, குதிரை மேய்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள். மேய்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு குதிரையைத் தேடி அங்கிருந்த காட்டுப் பகுதிக்குள் சென்ற அவள் பிறகு வீடு திரும்பவே இல்லை. அதற்குப் பின்னர் காவலர்களிடம் ஆசிபாவின் பெற்றோர் கொடுத்த புகார்கள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்துள்ளது. ஜனவரி 17 அன்று ஆசிஃபாவின் உடல் கிடைத்தது. அதைப் பார்க்கும்பொழுதே அவள் காட்டுமிராண்டித்தனமாக துன்புறுத்தப்பட்டு, கொன்று போடப்பட்டது தெரிகிறது. இதன் பிறகும் இந்த வழக்கை கையாண்டவர்கள் எல்லாம் ஏனோ தானோ என்பது போலவே கையாண்டிருக்கின்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் திங்கள்கிழமை (09-ஏப்ரல்-18) அன்று மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 15 பக்க சார்ஜ் சீட்டில் உள்ள விஷயங்கள் நெஞ்சைப் பதறவைக்கின்றன. திட்டமிடப்பட்ட கொடுஞ்செயல் இது. சஞ்சீராம் என்பவர் தான் இந்த வழக்கில் முக்கியமான குற்றவாளி. ஆசிஃபா என்ற சிறுமியைக் கடத்தி, காத்துவாவில் இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறிய கோவிலில் வைத்து தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். இந்த கொடூரத்தை செய்தவர்கள் சஞ்சீராமின் மகன் விஷால், அவரது உறவுக்கார இளைஞன் சுபம் சங்கரா, காவல் அதிகாரி தீபக் கஜூரியா, சுரேந்தர் வெர்மா, பர்வேஷ் குமார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/images_2.jpg)
ஆசிஃபாவை காட்டிலிருந்து கடத்திய பின்னர், அந்த சிறு கோவிலுக்கு கொண்டு வந்து மயக்க மருந்து கொடுத்து வைத்துள்ளனர். பின்னர் சஞ்சீராம் உறவினர் இளைஞனும் சஞ்சீராமின் மகனும் அந்த சிறுமியை கோவிலிலேயே மயக்க நிலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்துகொண்டே இருந்துள்ளனர். சஞ்சீராமின் மகன் மீரட்டில் படித்துக் கொண்டிருந்தவன். "உன் ஆசையை தீர்த்துக் கொள்ளலாம் வா" என்று வரவழைக்கப்பட்டவன். கோவிலுக்குள் இப்படி ஒரு கொடுமை நடப்பது பிறருக்கு சந்தேகம் வராதபடி சஞ்சீராமும் அந்த உறவு இளைஞனும் கோவிலில் பூஜை காலங்களில் தொடர்ந்திருக்கின்றனர். மேலும் அச்சிறுமியை சஞ்சீராமின் நண்பர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சில நாட்களில் அந்தச் சிறுமியை கொலை செய்ய காட்டுக்குக் கொண்டு செல்லும் போது இவர்களின் கூட்டாளியான தீபக் என்ற காவல்துறை அதிகாரி, கொலை செய்யும் முன் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து பிறகு அவளது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளனர். சிறுமி ஆசிஃபாஇறந்துவிட்டாரா இல்லையா என்ற சந்தேகத்தில் இரண்டு முறை கல்லைத் தூக்கி ஓங்கித் தலையில் போட்டிருக்கிறார்கள்.
சிறுமியின் சடலம் ஜனவரி 17 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி உடல் மீதிருந்த தடயங்களை அழிக்க சஞ்சீராம் ஒரு காவலருக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஜனவரி 23ஆம் தேதி இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மார்ச் 20தான் இவர்கள் போலீசிடம் பிடிபட்டுள்ளனர். மேலும் அந்த சிறுமியை இவர்கள் கொன்றதற்கு காரணமாக இப்படி செய்வதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் பகர்வால் என்னும் சன்னி இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த சமூகத்தை மிரட்டி வைக்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதாவது அந்தக் குழந்தையைக் கொன்று, அந்த சமூக மக்களை பயம் காட்ட நினைத்திருக்கின்றனர்.
இந்தக் கொடூரத்தை மறைக்க கோவிலைப் பயன்படுத்தியிருக்கின்றனர் இந்தக் கொடூரர்கள். மதவெறி, ஒரு குழந்தையைக் கொன்று வன்கொடுமை செய்யும் அளவுக்கு ஊறியிருக்கிறது இவர்களுக்குள். மதவெறி, இத்தனை நாளாக இவர்களை தண்டனையிலிருந்து காத்து வந்திருக்கிறது. மதவெறி, இங்கு மனிதம் என்பதை கேள்விக்கு ஆளாக்கியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)