Advertisment

“நாளை முதல் ராஜஸ்தானில் பா.ஜ.க என்ற ஒன்றே இருக்காது” - அசோக் கெலாட்

Ashok gehlot says From tomorrow there will be no BJP in Rajasthan

Advertisment

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (25.11.2023) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. காங்கிரஸ் வேட்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த குர்மீத் சிங் மறைவால் கரண்பூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்நிலையில், அதனைத்தக்கவைக்க காங்கிரஸும், இழந்த ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.கவும் கடும் போட்டியில் உள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா சட்டமன்றத்தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராஜஸ்தானில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லை. பா.ஜ.க தலைவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து பிரச்சாரத்திற்காக வந்தவர்கள்.

Advertisment

அடுத்த ஐந்து ஆண்டுக்கு அவர்களை இங்கு பார்க்க முடியாது. பிரதமர் மோடியின் பேச்சில் எந்த பொருளும் இல்லை. இது மாநில சட்டமன்றத் தேர்தல். மோடியின் தேர்தல் அல்ல. நாங்கள் இங்கேயேதான் இருப்போம். தொடர்ந்து மாநில வளர்ச்சி பற்றி பேசுவோம். ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். நாளை முதல் ராஜஸ்தானில் பா.ஜ.க என்றஒன்று இருப்பதே தெரியாது. தேர்தல் முடிவுக்குப் பிறகு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் அவர்கள் இங்கு வருவார்கள்” என்று கூறினார்.

ashokgehlot Rajasthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe