Advertisment

"ஆளுநர் தாமதப்படுத்தினால், ராஜ்பவனை மக்கள் முற்றுகையிடுவார்கள்" - அசோக் கெலாட்...

ashok gehlot about rajasthan political crisis

Advertisment

சட்டப்பேரவையைக் கூடுவதற்கு ஆளுநர் தாமதப்படுத்தினால் மக்கள் ராஜ்பவனை முற்றுகையிடுவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்த சூழலில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து 30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகியது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக அவரைக் கட்சியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது. மேலும் தான் பா.ஜ.க.வுக்கு செல்ல மாட்டேன் என்று அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 19 பேரைத் தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை விதித்துள்ளது.

Advertisment

இந்தச்சூழலில், இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், "ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். வரும் திங்கள் முதல் அவை நடவடிக்கைகள் தொடங்க வேண்டும். கரோனா வைரஸ் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே அவையைக் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமும் வேண்டிக் கொண்டேன். நேற்று இரவே ராஜ் பவனிலிருந்து உத்தரவு வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. யாருடைய நெருக்கடியால் ஆளுநர் தாமதப்படுத்துகிறார் எனத் தெரியவில்லை. இதனை எதிர்த்து ராஜ்பவனை முற்றுகையிட்டுமக்கள் நாளை போராட்டம் நடத்துவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Rajasthan Sachin Pilot
இதையும் படியுங்கள்
Subscribe