Arvind Kejriwal in Tihar Jail

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கடந்த 28 ஆம் தேதி (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

Arvind Kejriwal in Tihar Jail

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நேற்று (31.03.2024) ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, சுனிதா கெஜ்ரிவால் என 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Arvind Kejriwal in Tihar Jail

இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் முடிந்து அரவிந்த் கெஜிரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (01.04.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ‘கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை நீட்டிக்க தேவையில்லை’ என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Advertisment