எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில், டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இதனால், ஆம் ஆத்மி அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து தொகுதி பங்கீட்டில் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 15 சீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனை மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் இந்த தேர்தலை சந்திக்கும். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில், அதிகப்பெரும்பான்மையாக 67 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. அதன் பிறகு 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 62 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.