ADVERTISEMENT

 “எனக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும்” - அரவிந்த் கெஜ்ரிவால்

05:31 PM Sep 04, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க, இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹரியானா மாநிலம், பிவானியில் ஆம் ஆத்மி கட்சியின் வட்ட, மாவட்ட, மாநில நிர்வாகிகள் 4 ஆயிரம் பேர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ கடந்த சில நாட்களுக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பற்றி பா.ஜ.க பேசி வருகிறது. இந்த திட்டத்தால் நமக்கு என்ன பயன்? அல்லது சாமானியனுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது. ஒரே நாடு ஒரு தேர்தல் மட்டுமல்ல ஒரே நாடு 1000 தேர்தல் என்று கொண்டு வந்தாலும் சாமானியருக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. பொருளாதார ரீதியில் வலுவாக இருந்தாலும் சரி, பலவீனமாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் நல்ல சுகாதாரம் கிடைக்க வேண்டும்.

எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் ஒரே நாடு ஒரே கல்வி என்ற திட்டத்தை தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியைப் பெற வேண்டும். அதானி மற்றும் அம்பானியின் குழந்தைகள் பெறும் தரமான கல்வி, நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்.

ஆனால், பிரதமர் மோடி நாட்டுக்காக பணியாற்றாமல், ஒரே ஒரு நபருக்காக மட்டும் பணியாற்றி கொண்டிருக்கிறார். அவருக்கு 140 கோடி மக்களின் வாக்குகள் தேவைப்படுகிறது. ஆனால், அவர், ஒரே நாடு ஒரே நண்பன் என்று இருக்கிறார். மத்திய அரசு ஊழலில் ஈடுபடுகிறது. என்னை செயல்படவிடாமல் தடுக்க பார்க்கின்றனர். ஆனால், அதையும் மீறி டெல்லி மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்து வருகிறேன். இதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும்.

ஆம் ஆத்மி குறுகிய காலத்தில் அழிந்துவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார். ஆனால், நாங்கள் டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்துள்ளோம். கூடிய விரைவில் ஹரியானாவிலும் ஆட்சியைப் பிடிப்போம். இலவசங்கள் வழங்குவதை பற்றி ஹரியானா முதல்வர் நிதின் கட்கரி குறை கூறி வருகிறார். ஏழை குழந்தைகளுக்கு தரமான, இலவச கல்வியை வழங்குவது பாவமா? நீங்கள் மக்களுக்கு நல்லது செய்திருந்தால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வரப் போகிறோம். ஆம் ஆத்மியால் தான் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு போக முடியும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT