Skip to main content

"சிஸ்டம் சரியில்லை" - நிர்பயா வழக்கு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால்...

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

நிர்பயா வழக்கில் நீதி வழங்க இவ்வளவு காலம் ஆனதற்கு நமது சிஸ்டம் சரியில்லாததே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

arvind kejriwal on nirbhaya case convicts execution

 

 

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. அப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால், இரு அவைகளிலும் நிர்பயா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளான ஆறு பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ஆறு குற்றவாளிகளில் ஒரு நபர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட நிலையில், மற்றொரு குற்றவாளி சிறார் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மீதமிருந்த நான்கு குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர்கள் தாக்கல் செய்த மனுக்களால் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் தேதி மூன்று முறை மாற்றிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், " இந்த வழக்கில் நீதி வழங்க 7 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் இனி எப்போதும் நடக்காது என்று நாம் இந்நாளில் உறுதிமொழி எடுக்க வேண்டும். குற்றவாளிகள் கடைசிக்கட்டம் வரை சட்டத்தை எவ்வாறு கையாண்டார்கள் என்பதை நாம் பார்த்தோம். நமது அமைப்பில் நிறைய ஓட்டைகள் உள்ளன, நாம் நம்முடைய கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Arvind Kejriwal, Kavita extended court custody

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா, சன்பிரீத் சிங் ஆகியோர் திகார் சிறையில் இருந்து காணொளி மூலம் இன்று (23.04.2024) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மூவரின் நீதிமன்ற காவலையும் மே 7 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Arvind Kejriwal, Kavita extended court custody

முன்னதாக திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Insulin for Arvind Kejriwal in jail

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் அளித்த மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மனு கடந்த 18 ஆம் தேதி (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார். இந்நிலையில் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Insulin for Arvind Kejriwal in jail

இது குறித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “நாங்கள் கோரிய இன்சுலின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ளது. கடந்த 23 நாட்களாக அவருக்கு இன்சுலின் ஏன் கொடுக்கப்படவில்லை?. டெல்லி திகார் சிறை அரவிந்த் கெஜ்ரிவாலின் சித்திரவதை அறையாக மாறியுள்ளது. 24 மணி நேரமும் அவர் பிரதமர் அலுவலகம் மற்றும் துணை நிலை ஆளுநரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.