
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி அரசை வீழ்த்து பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷி சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை உறுப்பினராகவோ பதவி ஏற்பார் என்ற தகவல் வெளியானது. அதே சமயம், பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள லூதியான இடைத்தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சஞ்சீவ் அரோராவை லூதியான மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதனால், அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை உறுப்பினராக ஆவார் என்று நம்பப்பட்டது. வேட்புமனு அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை உறுப்பினராக ஆகமாட்டார் என்று ஆம் ஆத்மி தெரிவித்தது. இதனால், ஆம் ஆத்மி கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லூதியானா மேற்கு இடைத்தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இது நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தலுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.