70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியையும், பா.ஜ.கவையும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் முன்மொழியப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில், டெல்லி துணைநிலை ஆளுநர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (28-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “டெல்லி தேர்தலுக்கு முன்னதாக பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான ஆம் ஆத்மியின் திட்டங்களை நிறுத்த இரு கட்சிகளும் முயற்சிக்கிறது. பாஜகவுக்கு நேரடியாகச் செயல்பட தைரியம் இல்லை. அதற்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தை புகார் அளிக்கச் செய்துள்ளனர். ஆம் ஆத்மியை நிறுத்த காங்கிரஸும் பா.ஜ.கவும் இணைந்து செயல்படுகின்றன. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பெண்களுக்கு ரூ.2100, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்போம் என்று கூறியிருந்தேன். இந்த இரண்டு திட்டங்களும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், லட்சக்கணக்கானோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இது பாஜகவினரை பதற்றமடையச் செய்துள்ளது.
எல்லாவற்றையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. அவர்கள் வெற்றி பெற்றால், உங்களின் அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிடுவார்கள். பா.ஜ.கவுக்கு வாக்களித்தால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். மகிளா சம்மன் கார்டு மற்றும் சஞ்சீவனி யோஜனா போன்ற நலத்திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகள், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதில் விசாரணை செய்ய என்ன இருக்கிறது? நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் இவை.
ஆம் ஆத்மியின் பதிவு முகாம்களை சீர்குலைக்க பா.ஜ.க தலைவர்கள், குண்டர்களை அனுப்பியும், பதிவு செயல்முறையை நிறுத்த டெல்லி காவல்துறையையும் ஈடுபடுத்தியுள்ளனர். பெண்கள் மற்றும் முதியோர் நலனை பா.ஜ.க விரும்பவில்லை. அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள், அவர்கள் முன்னேறுவதை விரும்பவில்லை. பா.ஜ.க அவர்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியை வாழ முடியாததாக மாற்றுவார்கள். அவர்கள் மீண்டும் என்னை சிறைக்கு அனுப்பினால், நான் செல்வேன். டெல்லி மக்களுக்காக மீண்டும் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.