Arvind Kejriwal comments in support of Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாகஅரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும்முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “இந்தியாவில் பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை ஒழிக்க சதி நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் ராகுல் காந்தியை இப்படி அவதூறு வழக்கில் சிக்க வைப்பது சரியல்ல. கேள்வி கேட்பது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வேலை.நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம்.ஆனால் இந்த தீர்ப்பில் உடன்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.