Arvind Kejriwal case, ed question whether it is possible not to arrest as elections are coming up

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

Advertisment

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

Advertisment

இதனிடையேஅரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும் உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, தேர்தல் நேரத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளாதவாறு தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, மதுபானக் கொள்கை முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் முக்கிய குற்றவாளி; குற்றச் செயலில் முதன்மையாக இருப்பது அவர்தான். தேர்தல் வருவதால் கைது செய்யாமல் இருக்க முடியுமா? அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? என அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.

Advertisment

இந்த முறைகேடு வழக்கில் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் எங்களிடம் போதுமான அளவிற்கு வருமான வரித்துறை தரவுகளும் இருக்கின்றது என அமலாக்கத்துறை தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. இப்படியாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.