arvind kejriwal about mp suspension

வாக்கெடுப்பு இன்றி மசோதாவை நிறைவேற்றினால் நாடாளுமன்றம் எதற்கு..? தேர்தல் எதற்கு..? என ஆம் ஆத்மிதலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

Advertisment

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய விவசாயிகள் மசோதாவைத் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதனிடையே, அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவை துணைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களைக் கிழித்து எறிந்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

அதைத் தொடர்ந்து அவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜிவ் சவ்தாவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகதுணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடியவிடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் விவசாயிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள். மழை, வெயில், கொசுக்கடி, ஆகியவற்றில் தங்கள் வசதிகளைப் பொருட்படுத்தாமல், நாடாளுமன்ற வளாகத்திலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளார்கள். எட்டு எம்.பி.க்களும் தங்கள் வசதிக்காக எதையும் கேட்கவில்லை, தங்களுக்காகப் போராடவில்லை. ஜனநாயகத்துக்காகவும், அரசியலமைப்புசட்டத்துக்காகவும் போராடி வருகிறார்கள். தேசத்தில் உள்ள விவசாயிகளுக்காகபோராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Advertisment

இந்தசட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்கள் வாழ்க்கை முடிந்துவிடும் என்று தேசத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற ஆபத்தான மசோதாவை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றியுள்ளீர்கள். அப்படியென்றால், நாடாளுமன்றம் இருப்பதன் அர்த்தம் என்ன, தேர்தலுக்கு அர்த்தம் என்ன, எதற்காக இருக்கிறது? சட்டத்தை இதுபோன்ற வழியில் கொண்டுவந்தால், எதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடர்?" எனத் தெரிவித்துள்ளார்.