Skip to main content

அர்னாப் கோஸ்வாமி எவ்வளவு பணம் கொடுத்தார்..? விசாரணையில் பார்க் முன்னாள் அதிகாரி தகவல்...

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

arnab paid 12000 dollars to barc ex ceo

 

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி டி.ஆர்.பி முறைகேட்டில் ஈடுபட, தனக்குச் செய்த கைமாறுகள் குறித்து பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விசாரணையில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் (BARC) அமைப்பின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தா ஆகிய இருவரும் பேசிக்கொண்டதாக ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள வாட்சப் உரையாடல் கசிந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர்.பி. முறைகேடு வழக்கில் அர்னாப் கைது செய்யப்பட்டு, பின்னர் வெளிவந்த நிலையில், பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தாவுடனான அவரது இந்த உரையாடல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பார்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், 3,600 பக்க துணை குற்றப்பத்திரிக்கையை ஜனவரி 11 அன்று மும்பை காவல்துறை பதிவு செய்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, பார்தோ தாஸ்குப்தா மும்பை காவல்துறைக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு சுமார் 12, 000 டாலர் பணமும், அதுதவிர டி.ஆர்.பி தகவல்களை மாற்றியமைப்பதற்காக 40 லட்ச ரூபாயும் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

அவரின் வாக்குமூலத்தில், "அர்னாப் கோஸ்வாமியை எனக்கு 2004 முதல் தெரியும். ‘டைம்ஸ் நவ்’ சேனலில் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். நான் 2013-ல் பார்க் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சேர்ந்தேன். அர்னாப் கோஸ்வாமி 2017 இல் ரிபப்ளிக் டிவியை தொடங்கினார். ரிபப்ளிக் டிவியை தொடங்குவதற்கு முன்பே அவர் என்னுடன் அதுகுறித்த திட்டங்களைப் பற்றிப் பேசுவார். மேலும் அவரது சேனலுக்கு நல்ல மதிப்பீடுகளைப் பெற அவருக்கு உதவ வேண்டும் என்பதையும் மறைமுகமாகக் கூறுவார். டிஆர்பி அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும் என்று கோஸ்வாமிக்கு நன்றாகவே தெரியும். எதிர்காலத்தில் எனக்கு உதவுவதாகவும் அவர் கூறியிருந்தார். 

 

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு நம்பர் 1 மதிப்பீட்டை உறுதிசெய்ய எனது குழுவுடன் இணைந்து பணியாற்றினேன். இது 2017 முதல் 2019 வரை நடந்தது. இதற்காக, 2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி, லோயர் பரேலில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்து, நான் எனது குடும்பத்துடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து சுற்றுலா செல்வதற்காக 6000 டாலர் பணத்தைக் கொடுத்தார். அதேபோல, 2019 ஆம் ஆண்டு அதே இடத்தில் மீண்டும் என்னைச் சந்தித்த அவர், ஸ்வீடன் மற்றும் டென்மார்க் குடும்ப சுற்றுலாவிற்கு 6000 டாலர்களை எனக்குக் கொடுத்தார்.

 

மேலும் 2017 ஆம் ஆண்டில், கோஸ்வாமி என்னைத் தனிப்பட்ட முறையில் ஐடிசி பரேல் ஹோட்டலில் சந்தித்து ரூ .20 லட்சம் ரொக்கத்தைக் கொடுத்தார். அதேபோல, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கோஸ்வாமி என்னை ஐடிசி ஹோட்டல் பரேலில் சந்தித்து ஒவ்வொரு முறையும் ரூ.10 லட்சம் கொடுத்தார்" எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக ஊர்தி நிராகரிப்பு... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முகமூடி அணிந்து பேரணி!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

Tamil Nadu vehicle rejection ... Indian Democratic Youth Association rally wearing a mask!

 

சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள் ஆகியோர் உருவம் பொறித்த ஊர்தியை அனுமதிக்காததைக் கண்டித்து மேலவீதி கஞ்சித்தொட்டி முனையிலிருந்து அண்ணா சிலை வரை சுதந்திரப் போராட்ட வீரர்களின் முக உருவம் பொறித்த முகமூடியை அணிந்து மேலவீதி பெரியார் சிலையிலிருந்து அண்ணா சிலைவரை ஊர்வலமாகச் சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல், வாலிபர் சங்க கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் சதிஷ் , சிதம்பரம் நகர செயலாளர் கோபால், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கவியரசன், மாவட்ட குழு உறுப்பினர் பிரதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் லெனின், துணைத்தலைவர் ஆகாஷ் பரங்கிப்பேட்டை ஒன்றிய பொருளாளர் அருள்தீபன், கீரப்பாளையம் ஒன்றிய பொருளாளர் சூர்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

 

struggle

 

முன்னதாக கஞ்சித் தொட்டி முனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் கட்சியின் மூத்த உறுப்பினர் மூசா, நகர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

குடியரசுக் கட்சியின் ஒரு ஓட்டு; வரலாறு படைக்கப்போகும் இந்திய வம்சாவளிப் பெண்! 

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

vanita gupta

 

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அவர், பல்வேறு பொறுப்புகளுக்கு அதிகாரிகளைப் பரிந்துரைத்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

 

அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வனிதா குப்தாவை, ஜோ பைடன் இணை அட்டர்னி ஜெனரல் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தார். அதிபரின் பரிந்துரையை, அமெரிக்காவின் செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் பரிந்துரை தோல்வியில் முடியும் என்ற நிலையில், அதற்கான வாக்கெடுப்பு செனட்டில் நடைபெற்றது.

 

அமெரிக்க செனட்டில் குடியரசுக் கட்சி மற்றும் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி இரண்டிற்குமே 50 உறுப்பினர்கள் இருந்ததால், வனிதா குப்தா தேர்வாவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதேசமயம் வாக்கெடுப்பு சமனில் முடிந்ததால், வாக்களிப்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸும் செனட் அவையில் இருந்தார்.

 

இந்த வாக்கெடுப்பின்போது வனிதா குப்தாவிற்கு குடியரசுக் கட்சியினர் எதிராக வாக்களித்தாலும், ஒரே ஒரு குடியரசுக் கட்சி உறுப்பினர் வனிதா குப்தாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். இதனையடுத்து வனிதா குப்தாவிற்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து வனிதா குப்தாவை இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கும் பரிந்துரை வெற்றிபெற்றது.

 

இதனையடுத்து வனிதா குப்தா இணை அட்டர்னி ஜெனரலாகப் பதவி ஏற்கவுள்ளார். இந்தப் பதவி அமெரிக்க நீதித் துறையில் மூன்றாவது உயர்ந்த பதவியாகும். மேலும் இந்தப் பதவியேற்பதன் மூலம், இணை அட்டர்னி ஜெனரலாகும் முதல் இந்திய அமெரிக்கர், முதல் பெண் மற்றும் முதல் சிவில் உரிமை வழக்கறிஞர் என்ற வரலாற்றுப் பெருமைகளை அடையவுள்ளார்.