arnab goswami arrest and smriti irani statement

Advertisment

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை காவல்துறை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் இல்லத்திற்குள் நுழைந்து இன்று காலை அவரை கைது செய்தது. கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதற்கு இவர்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் தன்னை, தனது மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோவின்படி, மும்பை போலீஸார் அர்னாப் கோஸ்வாமியை அடித்து முடியைப் பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, "பத்திரிகைசுதந்திரம் பற்றி பேசுபவர்கள் இன்று அர்னாப் கைதுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும். அப்படி நிற்கவில்லை எனில் நீங்கள் பாசிசத்தை ஆதரிப்பவர்களே. உங்களுக்கு அர்னாபை பிடிக்காமல் இருக்கலாம், அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம், அவரது இருப்பையே நீங்கள் அருவருப்பாக உணரலாம் ஆனால் அமைதி காத்தீர்கள் என்றால் அடக்கு முறைக்குதுணை போகிறீர்கள் என்றே அர்த்தம். உங்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அடுத்து நீங்களாக இருந்தால் உங்களுக்காக யார் பேசுவார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.