Skip to main content

அரசு தரும் உணவு வேண்டாம்... பேச்சுவார்த்தைக்கும் சோறு கட்டி எடுத்துச் சென்ற விவசாயிகள்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

 


மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 7 -ஆவது நாளாக, விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அரசு கொடுக்க இருந்த மதிய உணவைப் புறக்கணித்து, தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து உண்டார்கள். இந்தச் சம்பவம் காண்பவர்களை நெகிழச் செய்தது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

இரு அவைகளிலும் நிறைவேற்றம்... இன்று இரவே சட்டமாகிறது வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா? 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

farmers

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்கியது. இந்தநிலையில், மக்களவை கூடியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

 

இதனையடுத்து, மக்களவை மீண்டும் கூடியதும், ஏற்கனவே அறிவித்தபடி மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பலத்த அமளிக்கிடையே தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து அந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

 

அதேநேரத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா, விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், அவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஒரேநாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, மாநிலங்களவையிலும் அமளிகளுக்கிடையே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், இந்த மசோதா இன்றே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட இருப்பதாகவும், இன்றே குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்க இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.