உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நவம்பர் 16 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் இலக்கியம், ஆன்மீகம், கலை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்துள்ளது. அண்மையில் நடந்த இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அதேநேரம் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழறிஞர்கள், உலக அளவில் உள்ள தமிழ் அறிஞர்களை அழைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என தமிழகத்தில் சிலர் குற்றச்சாட்டும் வைத்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தமிழ் இலக்கியக் கூற்றுக்களை பல மேடைகளில் மேற்கோள் காட்டி பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ''பிரதமர் தமிழ் இலக்கியங்களில் இருந்துதிருக்குறளிலிருந்துபுறநானூறு, அகநானூறிலிருந்து எடுத்து ஒவ்வொரு சபையிலும் தமிழ் பற்றி சொல்லும் பொழுது எனக்கு புல்லரிக்கிறது. அவர் ஒவ்வொரு பாஷைக்கும் ஈக்குவலான மரியாதை கொடுத்து தான் கொண்டிருக்கிறார்.

Advertisment

ஆனால், தமிழ் என்ற பொழுது அதனுடைய பழமையைப் புரிந்து கொண்டு, அதுவும் நாட்டின் பாரதத்தாயின் நாவில் இருக்கக்கூடிய மொழி என்பதால் எடுத்துச் சொல்கிறார். எல்லோரும் நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறார். இல்லைங்க, இந்தி திணிக்கிறார்கள் அப்படிங்கிறாங்க... இப்படி விதண்டாவாதம் பேசும் பொழுது, ஐயோ! இப்படி பெரிய ஒரு பழமையான கலாச்சாரத்தை அரசியல் காரணத்திற்காக மறந்து விடுகிறோமா அல்லது அதை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விடுகிறோமா என்று எண்ணும்போதுதான் தான் இந்த தமிழ் சங்கத்தின் முக்கியத்துவம் நமக்கு புரிகிறது'' என்றார்.