ADVERTISEMENT

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்!

08:23 PM Mar 14, 2024 | prabukumar@nak…

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இத்தகயை சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இதற்கிடையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது.
இதனிடையே, தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஓய்வு பெற்றார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இந்த திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று (14-03-2024) நடைபெற்றது. இந்த தேர்வு குழுவில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். காலை கூடிய இக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இவர்களில், ஞானேஷ் குமார் கேரளா மாநிலத்தையும், சுக்பிர் சிங் சாந்து பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

ADVERTISEMENT

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்திய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இதற்கான அரசானைய மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் உடனடியாக பதவியேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்களின் பதவியும் நிரப்பபட்டு விட்டதால் விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT