Anurag Thakur said that rumor that name India will be changed to Bharat

வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதையடுத்து 20வது ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா புறப்படுகிறார். இந்த பயண நிகழ்ச்சி நிரலில் பாரத் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல் குறிப்பில் இந்திய பிரதமர் என்பதற்குப் பதிலாக ‘பாரத பிரதமரின் இந்தோனேசிய பயண நிகழ்ச்சி’ எனக் குறிப்பிடப்பட்டு நிகழ்ச்சி நிரல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இதுகுறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, பாரத் என்ற பெயருக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், கிரிக்கெட், ரயில் போன்ற பலவற்றையும் ஆங்கிலேயர்கள்தான் கொடுத்தார்கள். அதனால் அனைத்தையும் மாற்றிவிடலாமா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், நாட்டின் பெயரை பாரத்என மாற்றப்போவதாக பரவும் தகவல் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது. பாரதத்தின் குடியரசுத்தலைவர் என்று அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டது பெரிய விஷயம் இல்லை. இதற்கு முன்பு பாரத் சர்க்கார் என்று அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே” என்று தெரிவித்திருக்கிறார்.