Advertisment

தீவிரவாதப் பயிற்சி முகாம்.. பதற்றத்தில் கேரளா..!

anti Social people training camp in Kerala .. Kerala under tension ..!

இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் சந்தேகப்படும்படி திரிந்துகொண்டிருந்த மலையாளியைப் பிடித்திருக்கிறார்கள் அம்மாநிலப் போலீசார். விசாரணையில் அவர் கேரளாவின் பத்தனம்திட்டாவின் பந்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. சந்தேகமடைந்த உ.பி. போலீசார், அவர் தீவிராத பிரிவைச் சேர்ந்தவரா எனக் கடுமையாக விசாரித்திருக்கிறார்கள். கடந்தஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கேரளாவிலுள்ள கொல்லம் நகரின் அருகே இருக்கும் பாதம் காட்டுப் பகுதியில், தமிழர்கள் மற்றும் மலையாளிகள் சுமார் 200 பேர் இணைந்து அங்கு பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு குரூப் பயிற்சி கொடுத்ததாக அந்த மலையாளி விசாரணையில் சொல்லியிருக்கிறார். இதனால் மிரண்டு போய் அலெர்ட்டான உ.பி. போலீசார், அவர் கொடுத்த தகவலை உடனடியாக தமிழ்நாடுக்யூ பிரிவு போலீஸ் தலைமைக்குத் தெரியப்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளனர். அதையடுத்து தாமதிக்காத தமிழ்நாடுக்யூ பிரிவினர், கேரள அரசுக்குத் தெரியாமலேயே அந்தப் பகுதிக்கு ரகசியமாகச் சென்று விசாரித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து தமிழ்நாடுதிரும்பிய க்யூ பிரிவு, அந்தத் தகவலை கேரள மாநிலத்தின் ஏ.டி.எஸ். (ANTI TERRORIST SQUAD) எனப்படும் தீவரவாத தடுப்புப் படையின் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

Advertisment

கொல்லம் மாவட்டத்தின் பாதம் பகுதி அடர்ந்த மலைக் காடுகளைக் கொண்டது. அங்கே கேரள அரசின் வனத்துறையைச் சேர்ந்த ஃபாரஸ்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் 10 ஹெக்டர் நிலத்தில் அண்டிப்பருப்பு எனப்படும் காஷ்யூ நட் ப்ளாண்டேஷனை (cashew nut plantation) அமைத்திருக்கிறது. அந்தப் பகுதிக்கு விரைந்த கேரள போலீசார், பயிற்சி நடந்ததற்கான அடையாளங்கள் பற்றி தொடர்ந்து இரண்டு மாதமாகத் தேடியிருக்கிறார்கள். ஏனெனில் அந்தப் பகுதியை மேலோட்டமாகப் பார்த்தால் ப்ளாண்டேஷனைக் கொண்ட செடிகள் பச்சைப்பசேலென்றுதான் தெரியும். தரைப்பகுதி தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதனால் அந்தப் பகுதியைச் சுமார் இரண்டரை மாதமாக புதர்களை நீக்கியும் செடிகளை அகற்றியும் சலித்திருக்கிறார்கள். அதே சமயம் ஏ.டி.எஸ். படையும் தன் பங்கிற்கு அந்த இடத்தை அலசியிருக்கிறது.

Advertisment

போலீஸ் படையின் தீவிரத் தேடலில் 16.06.2021 அன்று ப்ளாண்டேஷனின் ஒரு பகுதியில், ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்கள் கிடந்தது தெரியவர, உடனே தகவலை ஏ.டி.எஸ்.இன் தலைமை அதிகாரிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து அடுத்த நாள் அதே இடத்தின் மற்றொரு பகுதியில் இரண்டு ஜெலட்டின்கள் மற்றும் இரண்டு டெட்டனேட்டர்கள், வயர், அதை இயக்குவதற்கான பேட்டரி முதலியவை கிடைக்க, போலீசார் பரபரப்பாகிவிட்டனர். இந்தத் தகவலையடுத்து கேரளாவின் ஏ.டி.எஸ். படை, உளவுப்படை, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் மத்திய உளவுத்துறை என 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கே விரைந்திருக்கிறார்கள்.

கேரளாவின் ஏ.டி.எஸ். படைக்குத் தலைமை தாங்குபவர் டி.ஐ.ஜி.யான அனுப் குருவிளா. இந்த அதிகாரி என்.ஐ.ஏ.வில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவரை ஏ.டி.எஸ். படையின் தலைமைப் பதவியில் நியமித்திருக்கிறது கேரள அரசு. இதையடுத்து அனைத்துப் போலீஸ் படையும் பயிற்சிக்கான வேறு பல ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று ப்ளாண்டேஷன் காட்டுப்பகுதியை அலசியிருக்கிறார்கள். சிக்கிய ஜெலட்டின்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் வயர் பேட்டரி போன்றவற்றை தனது குரூப்புடன் சோதணையிட்டிருக்கிறார் டி.ஐ.ஜி.யான அனுப் குருவிளா.

அதையடுத்து இன்னொரு பிரிவினர் பாதம் பகுதியிலுள்ள கிராமப்புறங்களில் சந்தேகப்படும்படியாக வேறு யாராவது இந்தப் பகுதிக்கு வந்தார்களா, ஏதேனும் வெடிச் சத்தம் கேட்டதா என்று கிராம மக்களை விசாரணையில் குடைந்திருக்கிறார்கள். பல தரப்பினர் வசித்துவரும் அந்தக் கிராமத்தினர், “இது பற்றி எங்களுக்குத் தெரியாது, யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று பார்க்க முடியாது. ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக்கிலும், மாஸ்க் போட்டுக்கொண்டும் பலர் இங்கு வந்து போவதால், அவர்கள் பற்றிய அடையாளம் எங்களுக்கு எப்படித் தெரியும். அப்படி வழியில் போகிறவர்களை நாங்கள் தடுத்து நிறுத்தி விசாரிக்க முடியுமா. இங்கே நாங்கள் அனைத்து சமூகத்தினரும் சமாதானமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்கே வந்து எங்களை விசாரணை என்ற பெயரில் நீங்கள் துன்புறுத்துவது,பிளவுப்படுத்துவது சரியல்ல. இங்கே காட்டில் விவசாயம் செய்துவரும் சிலர் தங்களது பகுதியைச் சேதப்படுத்தவரும் காட்டு யானை மற்றும் பன்றிகளை விரட்டுவதற்காக வெடி போடுவார்கள். அந்த வெடிச் சத்தம் கேக்கும். அது இந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததுதான். இதுதான் எங்களுக்குத் தெரியும். மற்றப்படி நீங்கள் கேட்கிற செயல்பாடுகள் பற்றி எங்களுக்குத் தெரியாது. அதைவிடுத்து இந்தப் பகுதிக்கு யாரெல்லாம் வந்து செல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அது எங்களுக்குத் தேவையுமில்லை” என்று விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனாலும் திருப்தி அடையாத போலீசார், கிடைத்த எக்ஸ்புளோசிவ் பொருட்கள், தீவிரவாத பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டவை என திடமாக நம்புகிறார்கள். அதனாலேயே கிராம மக்களிடம் ஏதேனும் சிறிய க்ளு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஏறி இறங்குகிறார்கள். அங்குள்ள மக்களின் ஒவ்வொரு நடவடிக்கை அவர்களின் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் பற்றி ரகசியமாக விசாரித்துவருகின்றனர்.

எக்ஸ்புளோசிவை ஆய்வுசெய்த டி.ஐ.ஜி.யான அனுப் குருவிளா சொல்லுவது, “ஜெலட்டினில், எலெக்ட்ரிக்கல் மற்றும் நான்-எலெக்ட்ரிக்கல் (எலெக்ட்ரிக் அல்லாதது) என இருவகைகள் உண்டு. எலெக்ட்ரிக் ஜெலட்டினைத்தான் இதுபோன்ற பேட்டரி வயர்களைப் பயன்படுத்தி வெடிக்க முடியும். ஆனால் எலெக்ட்ரிக் அல்லாத நான்-எலெக்ட்ரிக்கல் ஜெலட்டினை இந்த பேட்டரி கொண்டு வெடிக்கவைக்க முடியாது. வெடிக்கவும் செய்யாது. ஆனால் இங்கு கிடைத்த ஜெலட்டின்கள் எலெக்ட்ரிக்கல் அல்லாத வகைகளைச் சேர்ந்தது. அப்படியிருக்க பேட்டரியும் வயரும் சேர்த்து போட்டிருக்கிறார்கள். இயக்க முடியாத பேட்டரி மற்றும் ஜெலட்டின்களை இங்கு எதற்காக போட்டிருக்கிறார்கள். பொருட்களை அலசும்போது ஏதோ தீவிரவாத பயிற்சி மற்றும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் உள்ளது. இந்த பொருட்களைப் போட்டதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இது ஒரு எச்சரிக்கை சிக்னலாஅல்லது விசாரணை அமைப்புகளைத் திசை திருப்பும் நோக்கத்தில் போடப்பட்டுள்ளதா.

மேலும் இந்த ஜெலட்டின்களில் SUN 90 என்ற அடையாளம் மட்டுமே இருக்கிறது. இது தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ் ப்ரைவேட் லிமிட்டட் என்ற உரிமம் பெற்ற கம்பெனியில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு தவறு. ஏனெனில் இதில் தயாரிப்பிற்கான பேட்ச் நம்பர் போடப்படவில்லை. அது நிச்சயம் போடப்பட்டிருக்க வேண்டும். அது போடப்பட்டிருக்குமேயானால் இவை எந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதை யாரிடமிருந்து யார் வாங்கினார் என்று நிச்சயம் கண்டுபிடித்துவிட முடியும். அந்தக் கம்பெனியின் தயாரிப்புகள் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுவதால் அது எங்கிருந்து வாங்கியது என்கிற விஷயமும் தெரியவராது. ஒருவேளை வாங்கியவரை ஏமாற்றும் பொருட்டு இந்தப் பொருட்கள் தரப்பட்டுள்ளதா என்பன போன்ற பல கேள்விகளுக்கு நாங்கள் பதில் தேடியாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்” என்றார்.

Tamilnadu Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe