Another YouTuber arrested for spying for Pakistan linked to Jyoti Malhotra

Advertisment

பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேரை சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா, ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் டேனிஷ் என்பவருடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சுற்றுலாத் தளங்கள், இந்திய ராணுவ நகர்வுகள் குறித்து ஜோதி, பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்கு தகவல் பரிமாறி வந்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில், ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Another YouTuber arrested for spying for Pakistan linked to Jyoti Malhotra

Advertisment

இந்த நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற உளவு வலையமைப்பில் ஈடுபட்டதாகக் கூறி, மற்றொரு யூடியூபரை இன்று பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். ‘ஜான் மஹால்’ என்ற சேனலை நடத்தி வரும் பஞ்சாப்பைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஜட் ரந்தாவாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி போலீஸ் அவரை கைது செய்துள்ளனர். இது குறித்த விசாரணையில், ஜஸ்பீர் சிங், ஐ.எஸ்.ஐக்காக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டவரும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக முன்னாள் அதிகாரியுமான எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டேனிஷ் உடனும் ஜஸ்பீர் சிங் உறவுகளைப் பேணி வந்ததாகவும், டேனிஷின் அழைப்பின் பேரில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த பாகிஸ்தான் தேசிய தின விழாவில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், 2020, 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் மூன்று முறை ஜஸ்பீர் சிங் பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார். இவர், ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ தொடர்புடைய செயல்பாட்டாளர்களுடனான அனைத்து தொடர்பு தடயங்களையும் ஜஸ்பீர் சிங் அழிக்க முயன்றுள்ளதாக தடவியியல் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், யூடியூபர் ஜஸ்பீர் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.