ADVERTISEMENT

ஐந்து ஆண்டுகளாக நீடித்த நதிநீர் பிரச்சனை...ஐந்து நிமிடத்தில் தீர்வு கண்டு முதல்வர் ஜெகன் அசத்தல்!

02:55 PM Jun 29, 2019 | santhoshb@nakk…

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரிக்கப்பட்ட பின், இரு மாநிலங்களுக்கும் இடையே நீர் பங்கீடு முக்கியப் பிரச்சனையாக இருந்து வந்தது. ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீர் பங்கீடு பிரச்சனையில் தீர்வு காண முடியாமல் இழுபறி நிலை நீடித்தது. இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், இடையேயான சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள "பிரகதி" அரசு இல்லத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதில் இரு மாநிலங்களின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் முதல்வர்கள் இரு மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து விவாதித்தனர். கோதாவரி ஆற்றில் இருந்து நீரை கிருஷ்ணா நதிக்கு திருப்ப ஆலோசனை மேற்கொண்டனர். இந்த திட்டம் தொடர்பாக ஜூலை 15- ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க இரு மாநில நீர் பாசனத்துறை அதிகாரிகளுக்கும் முதல்வர்கள் உத்தரவிட்டனர். அந்த அறிக்கை எப்போது கிடைக்குமோ, அன்றைய தினமே இரு மாநில முதல்வர்களும் கலந்து பேசி நீர் பங்கீட்டு தொடர்பான இறுதி முடிவை எடுக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆண்டுக்கு 3000 டிஎம்சி நீர் கடலில் கலப்பதை தடுக்க முதல்வர்கள் ஜெகன்மோகன் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆலோசனை மேற்கொண்டனர். இரு மாநில மக்களுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவே ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெலுங்கானா அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் முதற்கட்ட ஆலோசனை சுமுகமாக நடந்து முடிந்ததாக தெரிவித்துள்ளது. அதே போல் முதல்வர்கள் இருவரும் கூட்டாக விட்ட அறிக்கையில் "நாங்கள் எங்களை பற்றி சிந்திக்க மாட்டோம்" என்றும். மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நீர் வழங்குவது குறித்தும் ஆலோசித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக முதல்வர் ஜெகன் ஹைதராபாத் "பிரகதி" அரசு இல்லத்திற்கு சென்ற போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். இந்த பேச்சுவார்த்தை மூலம் இரு மாநிலங்களில் நிலவி வந்த ஐந்து ஆண்டுக்கால நதிநீர் பிரச்சனைக்கு இரு மாநில முதல்வர்களும் தீர்வு கண்டுள்ளனர் என்ற கூறலாம். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT