ADVERTISEMENT

500 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்..! 12 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரைச் சந்தித்த நெகிழ்ச்சி தருணம்!

12:36 PM Dec 11, 2019 | kirubahar@nakk…

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 40 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக மனித உரிமை அமைப்புகள் புள்ளி விவரங்களை முன்வைக்கின்றன. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் திரும்பி வந்ததில்லை. அப்படி வரவே மாட்டார் என்று நினைத்திருந்த பெற்றோரை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்து இருக்கிறார் லதா என்கிற 25 வயது இளம்பெண்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குட்லவல்லேரு என்ற கிராமத்தைச் சேர்ந்த, லட்சுமி நாராயணா, சஞ்சம்மா தம்பதிக்கு பிறந்தவர் ஆதிலட்சுமி. இவர் பள்ளிக்கு சரிவர செல்லாததால், தாய் சஞ்சம்மா அடிக்கடி கண்டித்திருக்கிறார். இதில் கடுப்பான ஆதிலட்சுமி, மார்ச்12, 2007-ல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கெங்கோ சுற்றித் திரிந்து ஒரு பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி நின்ற ஆதிலட்சுமியை தனது வீட்டிற்கு கூட்டிச்சென்ற பெண்மணி ஒருவர், வெறும் ரூ.500-க்கு மதுரையைச் சேர்ந்த மதுலிகா என்பவரிடம் விற்பனை செய்துள்ளார்.

ஆதிலட்சுமிக்கு லதா என்று பெயரிட்ட மதுலிகா, அவரை நன்கு கவனித்து தனது சொந்த மகளைப் போலவே வளர்த்துள்ளார். மகள் வளர்ந்ததும் மதுரையில் உணவகம் நடத்திவந்த காஞ்சிவனம் என்பவருக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். தன்னை எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்த மதுலிகாவின் மறைவுக்குப் பிறகு, தனது கணவரிடம் தன்னைப் பெற்றவர்கள் பற்றி எடுத்துச்சொல்ல, தாமதம் செய்யாமல் ஆந்திராவுக்கு கூட்டிச்சென்று விஜயவாடா காவல் ஆணையரிடம் மனு செய்ய வைத்தார்.

இதனடிப்படையில் செய்திகள் வெளியாக, ஆதிலட்சுமியின் பெற்றோர் அவரைத்தேடி நேரில் வந்தனர். மகள் தொலைந்தபோது கொடுத்த புகார் மனு, குடும்ப புகைப்படங்கள், செய்தித் தகவல்கள் என அனைத்தையும் அவர்கள் கொண்டு வந்தபிறகே, ஆதிலட்சுமியை சந்திக்க அனுமதித்துள்ளனர். ஒரு சிறிய தவறால் 12 ஆண்டுகளாக பிரிந்திருந்த பெற்றோரும், மகளும் சந்தித்து கண்ணீரின் மூலம் அன்பைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT